மீனவர் பிரச்சினை இரு நாடுகளுக்கும் தலைவலியாக உள்ளது! மோடியின் முன்பு இலங்கை அதிபர் திசநாயக்கே பேட்டி

post-img
சென்னை: அதிபராக பதவியேற்ற பிறகு நான் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இதுதான் என்றும், மீனவர்கள் பிரச்சினை இருநாடுகளுக்கும் தலைவலியாக இருப்பதாகவும், விரைந்து பிரச்சினைக்கு தீர்வு காண ஆர்வமாக இருக்கிறேன் என்றும் இலங்கை அதிபர் திசநாயக்கே கூறினார். பிரதமர் மோடியும் - திசநாயக்கே இன்று சந்தித்து பேசினர். இதன்பிறகு மோடியுடனான பிரஸ்மீட்டில் திசநாயக்கே இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிபராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே, சஜித் பிரமேதாசா ஆகியோரை தோற்கடித்து இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க வெற்றி பெற்றார். இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றுக்கொண்ட திசாநாயக்கவை இந்தியாவுக்கு வருமாறு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்தார். இந்திய அரசின் அழைப்பை ஏற்று, தனது முதல் வெளிநாட்டு பயணமாக இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தார். நேற்று மாலை டெல்லிக்கு வந்த இலங்கை அதிபரை விமான நிலையத்தில், மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். இதையடுத்து இன்று குடியரசுத்தலைவர் மாளிகை சென்ற திசநாயக்கவிற்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகள் குறித்து இந்த பேச்சுவார்த்தையின் போது ஆலோசிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடியும் இலங்கை அதிபரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது திசநாயக்கே கூறியதாவது:- "அதிபராக பதவியேற்ற பிறகு நான் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இதுதான். முதல் வெளிநாட்டு பயணமாக புதுடெல்லி வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு அழைப்பு விடுத்தற்கும் இங்கு அளித்த விருந்தோம்பலுக்கும் நான் இந்திய அரசுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு தீர்வு காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன். மீனவர் பிரச்சினை இருநாடுகளுக்கும் தலைவலியாகிவிட்டது. தமிழ்நாடு மீனவர்கள் இரட்டை மடி வலையை பயன்படுத்துவதற்கு முடிவு கட்ட வேண்டும் .இரட்டை மடி வலையை பயன்படுத்துவது மீன் பிடி தொழிலுக்கே பேரழிவாக அமையும். மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை குறித்தும் மோடியுடன் விவாதித்தேன்" என்றார். பின்னர் இரு நாடுகள் தரப்பிலும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:- இரு நாட்டு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். மீனவர் விவகாரத்தில் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டினர். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற மீன்வளம் தொடர்பான கூட்டுச் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அவர்கள் வரவேற்றனர். ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மற்றும் நீண்ட காலம் நிலைக்க கூடிய பரஸ்பர தீர்வை எட்ட முடியும் என்று இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர். இந்தியா- இலங்கை இடையே உள்ள சிறப்பு உறவை கருத்தில் கொண்டு, மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண தொடர்ந்து பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தினர்.

Related Post