சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி ஜப்பான் தனது ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றிய நிலையில், அந்நாட்டிலிருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்திருக்கிறது.
மின்சார உற்பத்தியில் அனு சக்தி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. தற்போது வரை அணு உலைகள் மூலம் பெறப்படும் மின் உற்பத்திதான் அதிக அளவில் இருக்கிறது. இருப்பினும் இது பாதுகாப்பான முறை அல்ல என்று கூறி உலகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்களின் அச்சத்தை உறுதி செய்யும் வகையில், கடந்த 2011ம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்தது. அதாவது, ஜப்பானில் பசிபிக் கடலை ஒட்டி இருந்த ஃபுகுஷிமா அணு உலை சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடல் நீர் இந்த அணு உலைக்குள் புகுந்ததால் மின் விநியோகம் தடைப்பட்டது. எனவே அணு மின் நிலையத்தை குளிர்விக்கும் இயக்கம் முழுமையாக நின்று போனது. அணு மின் நிலையங்களை குளிர்விக்கவில்லை எனில் நிலைமை கட்டுப்பாட்டை மீறி பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதேபோலதான் ஃபுகுஷிமா அணு மின் நிலையமும் பெரும் ஆபத்தை விளைவித்தது. அதாவது, இந்த அணு மின் நிலையத்தில் உள்ள மூன்று அணு உலைகள் உருகி கதிரியக்கத்தை வெளியேற்றியது.
இதனையடுத்து இந்த அணு மின் நிலையத்தை நிரந்தரமாக மூட ஜப்பான் அரசு முடிவெடுத்தது. எனவே இதனுள் இருக்கும் கடல் நீரை சுத்திகரித்து மீண்டும் கடலுக்குள் விடவும் முன்வந்தது. இருப்பினும் இந்த பணிகள் முழுமையடைய குறைந்தது 30 ஆண்டுகள் ஆகும். இதற்கிடையில் சுத்திகரிக்கப்பட்ட நீரை கடலில் கலக்க ஐ.நாவிடம் அனுமதி கோரியது ஜப்பான். இதனையடுத்து ஐ.நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, சுத்திகரிக்கப்பட்ட நீரை கடலில் கலக்க அனுமதி அளித்தனர். அதன்படி ஜப்பான் பசிபிக் கடலில் அணு மின் நிலையத்திலிருந்து நீரை வெளியேற்றி வருகிறது.
ஆனால் இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக ஜப்பானுக்கு அருகில் இருக்கும் தென் கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாது ஜப்பான், அணு மின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை கடலில் கலக்கும் பணியை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜப்பானிலிருந்து இனி எந்த கடல் உணவு பொருட்களும் சீனாவுக்குள் நுழைய கூடாது என அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
ஃபுகுஷிமாவிலிருந்து வெளியேற்றப்படும் நீரால் கடல் நீரில் கதிரியக்க மாசுபாடு ஏற்படலாம் என்றும், எனவே சீன நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், இறக்குமதி செய்யப்பட்ட உணவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், "கடல் அனைத்து மனிதக்குலத்தின் பொதுவான சொத்து.
ஃபுகுஷிமாவின் அணுக்கழிவு நீரை ஜப்பான் பசிபிக் கடலில் வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது சர்வதேச பொது நலன்களை புறக்கணிக்கும் மிகவும் சுயநலம் மற்றும் பொறுப்பற்ற செயலாகும். ஜப்பான் இந்த திட்டத்தில் அணு கழிவு நீர் சுத்திகரிப்பு கருவிகளின் நீண்டகால நம்பகத்தன்மையை நிரூபிக்கவில்லை. இந்த நீர் எந்த அளவுக்கு சுத்திகரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அச்சம் எழுந்திருக்கிறது" என்று சீன வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.