மத போதகருக்கே அல்வா கொடுக்க நினைத்த தம்பதி.. நெல்லையில் 1.5 கோடி நிலத்தை அபகரிக்க போட்ட பிளான்

post-img
நெல்லை: சட்ட விரோதமாக வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் சில நேரம், அசலுடன் வட்டியை திருப்பி செலுத்தினால் கூட கூடுதல் தொகை கேட்டு கடன் பெற்றவர்களை துன்புறுத்துவதாகவும், மிரட்டுவதாகவும் அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயும் இப்படியான ஒரு சம்பவம் தான் நடைபெற்றுள்ளது. கடனுக்காக எழுதிக்கொடுத்த கிரய ஒப்பந்தத்தை வைத்து 1.5 கோடி மதிப்புள்ள வீட்டை அபகரிக்க முயற்சி நடந்ததாம். இது பற்றிய விவரங்களை பார்க்கலாம். நெல்லை அருகே உள்ள களக்காட்டில் கடனுக்காக கிரயபத்திரம் எழுதிக்கொடுத்த நிலத்தை, திருப்பிக்கொடுக்காமல் அபகரிக்க முயற்சித்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த விரிவான விவரங்களை பார்க்கலாம். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மஞ்சுவிளை என்ற ஊர் உள்ளது. இந்த ஊரின் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலைராஜன் (வயது 52). மத போதகரான இவர் தனது மனைவியின் மருத்துவ செலவுக்காக களக்காடு பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவரிடம் ரூ.14 லட்சம் வட்டிக்கு கடனாக வாங்கியிருக்கிறார். இந்த கடனுக்காக தனக்கு சொந்தமான காலிமனையை கிரய ஒப்பந்தம் செய்து கொடுத்தாராம் கலைராஜன். இதற்கிடையில் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், மத போதகரான கலைராஜன் தனது மனைவி பெயரில் உள்ள ரூ.1.5 கோடி மதிப்புள்ள வீட்டை மாடசாமியின் தாயார் பெயருக்கு கிரய ஒப்பந்தம் போட்டு கொடுத்தாராம். நாளடைவில் மாடசாமியிடம் வாங்கிய கடனை அடைக்க திட்டமிட்ட மத போதகர் கலைராஜன், இதற்கான பணத்தை திரட்டினார். மாடசாமியை அணுகி ரூ.14 லட்சம் கடனை அடைக்கிறேன்.. இந்த பணத்தை வாங்கி கொண்டு அடைமானம் மற்றும் கிரய பத்திரங்களை ரத்து செய்து கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அப்போதுதான் மாடசாமியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. அதாவது, கிரய ஒப்பந்தத்தை ரத்து செய்ய மறுத்த மாடசாமி, ரூ.1.5 கோடி மதிப்புள்ள வீட்டை அபகரிக்கும் திட்டத்துடன், கலைராஜனை வீட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டினாராம். இதனால், அதிர்ச்சி அடைந்த கலைஞரான், உடனடியாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மாடசாமி மற்றும் அவரது மனைவி, மகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வட்டிக்கு கடன் கொடுத்ததோடு, கடனை அடைக்க முற்பட்ட போது, வீட்டு கிரய ஒப்பந்தத்தை வைத்து அபகரிக்க முயற்சித்த சம்பவத்தால் நெல்லை களக்காடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடிகளை தவிர்க்க மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அவசர காலத்தில் பணம் தேவைப்படும் போது அரசு அங்கீகரித்த கடன் நிறுவனங்களிடம் கடனை பெற முயற்சிப்பது நல்லது எனவும் தனியாரிடம் பணம் வாங்கிக்கொண்டு அல்லல் படும் நிலைமையை தவிர்க்கலாம் என்பதும் பலரின் கருத்தாக உள்ளது.

Related Post