கோவை: கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் அவரது நண்பர் அஸ்வின் என்பவர், காரை கடனாக பெற்றுள்ளார். குடும்பத்துடன் வெளியில் செலவதற்காக பெற்ற காரை, பல நாட்கள் ஆகியும் திரும்ப கொடுக்கவில்லை.. காரை அவர் 2 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளார். பின்னர் அதே காரை திருடி சுற்றித்திரிந்துள்ளார். அவரை புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கோவை வடவள்ளி லிங்கனூர், விநாயகர் காலனியை சேர்ந்த 31 வயதாகும் மணிகண்டன், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் நாகா அஸ்வின் (29). வடவள்ளியை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியே செல்ல விரும்பினார். இதற்கான தனது நண்பன் மணிகண்டனிடம் காரை கடனாக கேட்டுள்ளார். அவரும் நண்பர் தானே என்று காரை கொடுத்து அனுப்பியிருக்கிறார்.
ஆனால் நாகா அஸ்வின் காரை வாங்கி பல நாட்கள் ஆகியும் மணிகண்டனுக்கு திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து நாகா அஸ்வினிடம் கேட்டபோது, சில தினங்களில் தந்துவிடுகிறேன் என கூறி தொடர்ந்து தாமதப்படுத்தி வந்திருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த மணிகண்டன் இதுகுறித்து துடியலூர் போலீசில் காரை வாங்கிக்கொண்டு நண்பன் தரமறுப்பதாக புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், நாகா அஸ்வின், மணிகண்டனின் காரை ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த பிரேம்குமார் என்பவரிடம் ரூ.2 லட்சத்துக்கு அடமானம் வைத்துள்ளார். இதையடுத்து பிரேம்குமார் அந்த காரை தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருக்கிறார். அதன்பின்னர் நாகா அஸ்வின் அதே காரை, தனது நண்பரான வடவள்ளி, நவாவூர் பிரிவை சேர்ந்த ஜித்தீஸ் ரெட்டி (21) என்பவருடன் சேர்ந்து திருடி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கோவை துடியலூர போலீசார் ஜி.பி.எஸ். கருவி மூலம் கார் எங்கு இருக்கிறது என தேடி பார்த்தனர். அப்போது, கார் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து உடனே துடியலூர் போலீசார் கோபிசெட்டிப்பாளையத்திற்கு விரைந்து சென்று காரை மீட்டனர். மேலும் வெளியூர் செல்வதாக கூறி காரை கடனாக வாங்கிவிட்டு, அதனை அடமானம் வைத்ததுடன், மீண்டும் திருடி சுற்றித்திரிந்த நாகா அஸ்வின், ஜித்தீஸ்ரெட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நண்பர்களுக்கு காரை இரவல் கொடுக்கும் முன்பு கவனமாக இருங்கள். இப்படியும் நடக்கலாம். இதே கோவையில்தான் இருசக்கர வாகனத்தை வாங்கி சென்ற நண்பன் மது அருந்துவிட்டு போய் போலீசில் பிடிப்பட்டுள்ளார். அந்த பைக்கை மீட்க பல ஆயிரம் அவர் செலவு செய்ய வேண்டியதிருந்தது. எனவே கார், பைக் நண்பர்கள் கேட்டால் இரவல் கொடுப்பதற்கு முன்பு ஒருமுறைக்கு பல முறையோசித்து முடிவெடுங்கள்...