GST கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவு! விலை ஏறும், குறையும் பொருட்கள் என்னென்ன? முழு விவரம்

post-img
டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், விலையேறும் மற்றும் குறையும் பொருட்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. விலையேறும் பொருட்கள்: ஜிஎஸ்டி வரி மாற்றியமைக்கப்பட்டதால் பழைய கார்களின் விலை எகிறுகிறது. விலை குறைவாக இருக்கும் என்பதால்தான் பலரும் பழைய காரை நோக்கி செல்கிறோம். ஆனால் தற்போது இதற்கான ஜிஎஸ்டி வரியானது 12-18% வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. எனவே விலை தாறுமாறாக அதிகரிக்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், பழைய மின்சார கார்களுக்கும் கூட வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நாடுகள் முயன்று வரும் நிலையில், வரி உயர்வு இந்தியாவில் செகன்ட் ஹான்ட் மின்சார கார்களின் விலையை உயர்த்த இருக்கிறது. இது ஆட்டோ மொபைல் விற்பனை சந்தையை பாதிக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். பாப்கான்களின் விலை: சினிமாக்களுக்கு செல்வோர் பெரும்பாலானோரின் புலம்பல் பாப்கான் விலையை பற்றியதாகத்தான் இருக்கிறது. இந்த பாப்கான்களுக்கு தற்போது 12 மற்றும் 18% வரி உயர்த்தி விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, பேக் செய்யப்படாத, உடனடியாக சாப்பிடக்கூடிய (ready-to-eat) பாப்கான்களுக்கு 12 சதவிகிதமும், இதிலே கொஞ்சம் கேரமல் ஊற்றி கொடுத்தால் அதற்கு 18 சதவிகிதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. படம் முக்கியமா? பாப்கான் முக்கியமா? மக்களே! ஹாலோ பிளாக்ஸ் கற்கள்: வீடு உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு பயன்படுத்தப்படும் ஹாலோ பிளாக்ஸ் எனப்படும் கற்களுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சாதாரண ஹாலோ பிளாக்ஸ் கற்களுக்கு இது பொருந்தாது. மாறாக ஆட்டோ கிளேவ் செய்யப்பட்ட கற்களுக்கு (Autoclaved aerated concrete blocks) இந்த வரி பொருந்தும். நைசான சிமென்ட் பவுடர்களை கொண்டு இந்த வகை கற்கள் உருவாக்கப்படுகிறது. நைஸ் சிமென்ட் பவுடர் 50%க்கும் அதிகமாக உள்ள அனைத்து கற்களுக்கும் இந்த வரி உயர்வு பொருந்தும். தவிர கார்ப்ரேட்களுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்யும் நிறுவனங்களின் சேவைகளுக்கும் வரி அதிகரிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட அனைத்தும் இனி விலை அதிகரிக்கும். விலை குறையும் பொருட்கள்: செறிவூட்டப்பட்ட அரிசிக்கான வரி 5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மரபணு சிகிச்சைக்கான வரியும் குறைக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ துறையின் வளர்ச்சியை இந்த வரிகுறைப்பு ஊக்குவிக்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான, அரசின் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உணவு இடுபொருட்களுக்கு 5% மட்டுமே வரி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வான் இலக்குகளை தாக்க, தரையிலிருந்து நீண்ட தொலைவுக்கு ஏவப்படும் ஏவுகணையின் தயாரிப்பை அதிகரிக்க, தயாரிப்பு பொருட்களுக்கு ஜஎஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல விவசாயிகள் மூலமாக நேரடியாக விற்கப்படும், மிளகு மற்றும் திராட்சைக்கு ஜிஎஸ்டியிலிருந்து வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் விவசாயிகள் நேரடியாக பலன் பெறுவார்கள் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. இவையெல்லாம் தவிர, வங்கிகள் அல்லது வங்கி அல்லா நிதி நிறுவனங்களின் கடன்கள், அபாரதங்கள் ஆகியவற்றிற்கும் ஜிஎஸ்டி பொருந்தாது என ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்திருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த வரி திருத்தங்கள் பல்வேறு தரப்பினருக்கும் பலனளிக்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

Related Post