சென்னை: சென்னை பல்லாவரம் மலைமேடு பகுதி மக்கள் சுமார் 30 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, தலை சுற்றல் ஏற்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் அருகே மலைமேடு பகுதியில் வசித்து வரும் மக்கள் சுமார் 30 பேருக்கு நேற்று வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்டோர், தனியார் மருத்துவமனையில் சிலர் என மொத்தம் 32 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்ததாகவும், அந்த தண்ணீரைப் பருகியதால் உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதில் திருவேதி என்பவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மோகன்ராஜ் என்பவர் இன்று உயிரிழந்துள்ளார். மேலும், வரலட்சுமி என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் கூடியுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த அமைச்சர் தா.மோ. அன்பரசன், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு குடிநீர் காரணமில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே, மாநகராட்சி அதிகாரிகள் மாதிரி நீர் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும்.
Weather Data Source: Wettervorhersage 21 tage