சென்னைக்கு அடுத்து.. தமிழ்நாட்டிலேயே மிகப்பெரியது.. பெங்களூர், ஹைதராபாத்திற்கு போட்டியாகும் கோவை!

post-img
கோவை: கோவையில் நாளுக்கு நாள் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் கோவையில் வர உள்ள தனியார் திட்டம் ஒன்று கவனம் பெற்றுள்ளது. அதன்படி கோவையில் GSquare Commercial நிறுவனம் Sre Sasthaa Developers உடன் இணைந்து, 4 லட்சம் சதுர அடியில் கிரேடு A அலுவலகத்தை அமைக்க உள்ளது. 20-தள உயர்தரத்தில் நகரின் மிகப்பெரிய கட்டிடமாக இது அமைக்கப்பட உள்ளது. இது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும். வடகோவையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. கோயம்பத்தூரில் கட்டப்படும் இந்த 20 மாடிகள் கொண்ட வணிக ரீதியான தகவல் தொழில்நுட்ப அலுவலக கட்டிடம் தமிழ்நாட்டில் சென்னைக்கு வெளியே கட்டப்படும் மிக உயரமான கட்டிடம் ஆகும். சென்னை வெளியே தமிழ்நாட்டிலேயே இந்த கட்டிடம்தான் மிகப்பெரியது. கோவையில் விரைவில் எஃப்எஸ்ஐ விதிகள் மாற்றப்படலாம் என்று கூறப்படும் நிலையில்தான் இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெங்களூர், ஹைதராபாத்திற்கு போட்டியாக கோவை உருமாறும் வாய்ப்புகள் இதனால் ஏற்பட்டு உள்ளன. கடந்த 2 வருடங்களாகவே கோவையில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. அங்கே தொழில் செய்வதற்கு ஏதுவான சூழல் உருவாகிக்கொண்டு இருக்கிறது. இதற்கு முன்பாக கடந்த வருடம் ஜூலை மாதம் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த மாநாடு நடைபெற்றது. மொத்தம் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம் 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன. அப்போதும் கோவையில் அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொச்சி, ஜெய்ப்பூர் மற்றும் புவனேஸ்வர் ஆகியவை ரியல் எஸ்டேட் துறையில் வளர்ந்து வரும் 10 நகரங்களாக உருவெடுத்து உள்ளதாக CREDAI மற்றும் Cushman & Wakefield நிறுவனங்களின் அறிக்கை தெரிவித்துள்ளது. ரியல் எஸ்டேட் அமைப்பான CREDAI மற்றும் ரியல் எஸ்டேட் ஆலோசகர் நிறுவனமான குஷ்மேன் & வேக்ஃபீல்ட் ஆகியவை எகிப்தில் உள்ள 21வது NATCON இல் 'இந்தியாவின் அடுத்த 10 வளர்ந்து வரும் சந்தைகள்: வணிக ரியல் எஸ்டேட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான நிறுவனங்கள்' என்ற அறிக்கையை வெளியிட்டன. இதில்தான் இந்த 10 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து ரியல் எஸ்டேட் துறையில் வளர்ந்து வரும் அடுத்த பெரிய நகரம் கோயம்புத்தூர்தான் என்று இந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது . கோவையில் குவியும் முதலீடு; இந்த நிலையில்தான் முன்னணி வேளாண் ஆராய்ச்சி நிறுவனமான கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட், தனது கோரமண்டல் நானோ தொழில்நுட்ப மையத்தை கோயம்புத்தூரில் தொடங்குவதாக அறிவித்து உள்ளது. இது தாவர ஊட்டச்சத்து மற்றும் பயிர் பாதுகாப்பிற்கான ஆராய்ச்சிகளுக்கு உதவும். நானோ தொழில்நுட்பம் மூலம் வேளாண்துறையில் பல மாற்றங்களை இந்த ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இந்த மையம் கோரமண்டலின் ஆறாவது ஆர் & டி மையம் ஆகும், அடுத்த தலைமுறை விவசாய தேவைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் இரண்டாவது தொழில்நுட்ப மையமாகவும் இருக்கும். நானோ தொழில்நுட்ப மையம், நானோ தயாரிப்புகளின் தொகுப்பு, பயிர்களின், விதைகளின் குணாதிசயம், உயிரியல் பாதுகாப்பு சோதனை ஆகியவற்றிற்கான அதிநவீன R&D பணிகளை மேற்கொள்வதற்கான உயர்தர உபகரணங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கருவிகளுடன் இந்த மையம் திறக்கப்பட்டு உள்ளது. கோவை கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டின் ஆராய்ச்சி மையமாக உருவெடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது அமைக்கப்பட்டு உள்ள ஆர் அண்ட் ட மையம் கோவையின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post