சென்னை: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு அரசியல் தளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய கருத்துக்கு திருமாவளவன் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், "விஜய் கட்சியை தொடங்கியதே எங்களுடன் கூட்டணியை வைக்கத்தான் போல" என விசிக எம்பி ரவிக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை ந்நதம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் புத்த வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சந்துரு, நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், விசிக நிர்வாகி ஆதவ அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். இதில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்க இருப்பதாக தொடக்கத்தில் சொல்லப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்க மாட்டார் என்று பின்னர் அறிவிப்பு வெளியானது.
இப்படி இருக்கையில் இன்று புத்தகத்தை வெளியிட்டு பேசிய விஜய், "விசிக தலைவர் திருமாவளவனால் இன்று வர முடியாமல் போய்விட்டது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு அழுத்தம் இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனசு முழுக்க முழுக்க இனி நம்முடன் தான் இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை அரசியல் தளத்தில் கிளப்பியிருந்த நிலையில், திருமாவளவன் இதற்கு விளக்கமளித்திருந்தார். அதில், "விஜய் அம்பேத்கர் நூலை வெளியிட்டிருப்பது வரவேற்பதற்குறியது. நான் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்கததற்கு காரணம் திமுக அல்ல. அரசியல் அழுத்தம் காரணமாக இந்நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என்று விஜய் பேசியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அழுத்தம் கொடுத்தால் இணங்க கூடிய அளவுக்கு விசிக பலவீனமாக இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து விசிக எம்பி ரவிக்குமார், "விஜய் கட்சியை தொடங்கியதே எங்களுடன் கூட்டணியை வைக்கத்தான் போல" என்று விமர்சித்துள்ளார். அதாவது, "தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் விரிவாக அறிக்கை கொடுத்ததற்குப் பிறகும்கூட விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விடுதலைச் சிறுத்தைகளோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது. தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து 'அழைப்பு' விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
இதையெல்லாம் பார்க்கும் எவரும், ரஜினிகாந்த்தை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள்தான் அவர் உடன்படாததால் விஜய்யை கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளவார்கள்.
'விஜய், மணிப்பூரைப் பற்றிக் குறிப்பிட்டாரே' என்று அப்பாவியாகக் கேட்பவர்கள் அந்த மேடையில் இருந்த நீதிபதி கே.சந்துருவிடம் Alibi என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது" என்று தனது x தளத்தில் பதவிட்டுள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage