கட் & ரைட்! “நான் ஏன் சொல்லணும்?”துஷார் மேத்தா கோரிக்கையை நிராகரித்த நீதிபதி

post-img

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா வைத்த கோரிக்கையை தடாலடியாக நிராகரித்தார் நீதிபதி நிஷா பானு. என் தீர்ப்பில் நான் உறுதியாக இருக்கும்போது, நான் ஏன் இதை முடிவு செய்ய வேண்டும் என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

மூன்றாவது நீதிபதி சொன்ன பாயிண்ட்: நீதிபதி நிஷா பானு, மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை ஏற்று, செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவிட்டார். ஆனால் நீதிபதி பரத சக்கரவர்த்தி, ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ததுடன், 10 நாட்களில் சிறை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

மாறுபாடான தீர்ப்பு வழங்கப்பட்டதால் வழக்கு, மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பை ஏற்பதாகக் கூறி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை தீர்மானிக்க வழக்கை மீண்டும் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்தார்.

இன்று மீண்டும் விசாரணை: இதை தலைமை நீதிபதி ஏற்று ஒப்புதல் அளித்த நிலையில், வழக்கு, நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும், அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகினர்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்ற காவல் குறித்து முடிவு செய்யவே மூன்றாவது நீதிபதி, வழக்கை இந்த அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்ததாகவும், செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

நான் உறுதியாக இருக்கிறேன்: செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தீர்ப்பை எதிர்த்து இரு தரப்பினரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி நிஷா பானு, நான் எந்த வாதங்களையும் இப்போது கேட்கப் போவதில்லை.

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்ற எனது தீர்ப்பில் உறுதியாக இருக்கிறேன், இப்போது இரு தரப்பும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் மேற்கொண்டு நான் எதுவும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

வேண்டாம் பரத்: மேலும், காணொளிக் காட்சியில் தொடர்பில் இருந்த நீதிபதி பரத சக்கரவர்த்தியிடம், "பரத்.. இந்த வழக்கை நிலுவையில் வைக்க விரும்பவில்லை. இது குறித்து உச்ச நீதிமன்றமே முடிவு செய்யப்படும். இதற்கு மேலும் இதை நிலுவையில் வைத்திருக்க வேண்டாம்" எனக் குறிப்பிட்டார் நீதிபதி நிஷா பானு.

அப்போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரம் விவாதிக்கப்பட வேண்டியதில்லை. செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை காவலில் வைக்கப்படும் தேதியை முடிவு செய்வதற்காக மட்டுமே இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

நான் எதுக்குங்க முடிவு பண்ணனும்?: அதற்கு நீதிபதி நிஷாபானு, என்னால் அமலாக்கத்துறை காவலில் வைக்க வேண்டிய தேதியை முடிவு செய்ய முடியாது. அமலாக்கத்துறை கைது செய்ததே சட்ட விரோதம், செந்தில் பாலாஜியை விடுவிப்பதற்கான எனது தீர்ப்பில் உறுதியாக நிற்கிறேன் என்று சொல்லும்போது, நான் ஏன் காவலில் வைக்கும் தேதியை முடிவு செய்ய வேண்டும்? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, அனைத்து அம்சங்களையும் சுப்ரீம் கோர்ட் முடிவெடுக்கும் போது, இந்த வழக்கை ஏன் இன்னும் இங்கு விசாரிக்க வேண்டும். வழக்கை முடித்து வைக்கலாம் என நீதிபதி நிஷா பானு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நீதிபதி பரத சக்கரவர்த்தியும், மேல்முறையீடுகள் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளதால், இதில் நாங்கள் எதுவும் கூற வேண்டியதில்லை எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.

Related Post