சென்னை: தமிழ்நாட்டில்- தந்தை பெரியார் மண்ணில் இனியும் பெரியாரை நாம் தமிழர் கட்சியினரும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் விமர்சித்தா தமிழகத்தில் நடமாடவே முடியாத சூழ்நிலை உருவாகும் என்று மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடுமையாக எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெரியார் இயக்கங்களால் அரசியலுக்கு அறிமுகமானவர் சீமான். திரைப்பட இயக்குநர் என்பதால் சீமான் பேசினால் மக்கள் கவனமாக கேட்பார்கள் என்பதற்காக பெரியார் இயக்கங்கள், அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தன.
2009-ம் ஆண்டு பெரியார் இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள் தங்களுக்கான ஒரு கட்சியாக நாம் தமிழர் என்ற அரசியல் கட்சியை உருவாக்க விரும்பின. இந்த வாய்ப்பை சில சக்திகள் பயன்படுத்திக் கொண்டு சீமான் தலைமையில் நாம் தமிழர் என்ற தனி இயக்கத்தை உருவாக்கிவிட்டன; பின்னர் அவர்கள் ஆதரவுடன் நாம் தமிழர் கட்சியாக அது மாறியது.
இதன்பின்னர் நாம் தமிழர் கட்சி, பெரியார் கருத்துகளுக்கு எதிராக பயணித்தது; பெரியாரை வழிகாட்டி என்றார்; பெரியார் தலைவனே இல்லை என்றார். அதேநேரத்தில் பெரியார் பிறந்த நாள், நினைவு நாளுக்கு புகழ் வணக்கம் செலுத்தவும் செய்தார் சீமான்.
இந்த நிலையில் தற்போது பெரியாரை தமிழ்நாட்டின் எதிரியாக கட்டமைக்க சீமான் முயற்சிக்கிறார். பிரபாகரன் vs பெரியார் எனவும் பேசிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் பாஜக போன்ற இந்துத்துவா சக்திகள், பெரியாரை விமர்சிக்க முடியாத நிலையை உடைக்கும் வகையில் பாஜகவுக்கு ஆதரவாக உக்கிரமாக பெரியாரை மிக மோசமாகவும் இழிவாகவும் விமர்சிக்கிறார் சீமான். நாம் தமிழர் கட்சியினரும் சீமான் வழியில் தந்தை பெரியாரை இழிவுபடுத்தி வருவதால் சமூக வலைதளங்களில் கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பெரியாருக்கு ஆதரவாக சீமானுக்கு எதிராக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி களமிறங்கி உள்ளார். இது தொடர்பாக திருமுருகன் காந்தி கூறுகையில், பெரியார் மண்ணில் பிழைப்பை நடத்திக்கொண்டு,பெரியாரை பற்றி இனியும்,சீமானும் அவன் அல்லக்கைகளும் அவதூறு பரப்பினால் ரோட்டில் நடமாட முடியாது என்று எச்சரிக்கை விடுக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.