சென்னை: திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை ஒருவர் உயிரிழந்து இருப்பது விபத்து தான். இதில் எந்த வகையிலும் நடிகர் பொறுப்பேற்க முடியாது. குடித்துவிட்டு யாராவது உயிரிழந்தால் அதற்கு அந்த அமைச்சரை யாராவது கைது செய்வார்களா? என்று சீமான் கூறியுள்ளார். புஷ்பா 2 படம் திரைப்படம் பார்க்க சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தற்கு நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சீமான் இவ்வாறு கூறியுள்ளார்.
புஷ்பா 2 படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. 5 ஆம் தேதி படம் வெளியான நிலையில், 4 ஆம் தேதி ரசிகர்களுக்காக சிறப்பு காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் வெளியானது. அப்போது ரசிகர்களுடன் அல்லு அர்ஜுன் படம் பார்க்க சென்றதால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 35 வயது பெண் உயிரிழந்தார். படம் பார்க்க சென்றபோது அல்லு அர்ஜுன் போலீசுக்கு தெரியப்படுத்தவில்லை என்றும் இதனாலேயே இந்த சம்பவம் நேரிட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் இது தொடர்பான புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் இருந்த நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். ஒரு நாள் முழுவதும் சிறையில் இருந்த அல்லு அர்ஜுன் மறுநாள் ஜாமீனில் வெளிவந்தார். பிரபல நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாக நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் நானி உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை ஒருவர் உயிரிழந்து இருப்பது விபத்து தான். இதில் எந்த வகையிலும் நடிகர் பொறுப்பேற்க முடியாது. குடித்துவிட்டு யாராவது உயிரிழந்தால் அதற்கு அந்த அமைச்சரை யாராவது கைது செய்வார்களா? என்று சீமான் கூறியுள்ளார்.
சீமான் கூறியதாவது:- இந்த சம்பவம் ஒரு விபத்து தான். அதற்கு கைது என்பது தேவையற்றது. தியேட்டரில் படம் பார்க்க சென்ற போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்தது என்பது விபத்து தான். இதற்கு நடிகர் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது. இதை எப்படி சொல்லவேண்டுமென்றால், மது குடிப்பதால் ஒருவர் இறந்துவிடுகிறார் என்றால், அதற்கு அந்த மதுபானத்தை விற்ற டாஸ்மாக் துறை சார்ந்த அமைச்சர் பொறுப்பேற்பாரா..
அமைச்சரை கைது செய்ய முடியுமா.. அப்படியெல்லாம் செய்ய முடியாது. அது தேவையற்றது. அவசியமற்றது. 75 சதவீதம் அந்த படத்தின் வசூல் என்பது கூடத்தான் செய்திருக்கிறது. அவரை வீழ்த்த வேண்டும் என்று நினைத்து, அந்த படத்தின் வசூலைத் தான் அதிகரித்து அவர்களுக்கு உதவி தான் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. படத்துக்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்தது. தற்போது படத்தின் வசூலானது இந்த ஆண்டில் வெளிவந்த இந்திய திரைப்படங்களிலேயே மிக அதிகமாகும். படத்தின் வசூல் ஒருபுறம் இருந்தாலும், புஷ்பா 2 படத்தின் நடிகர் அல்லு அர்ஜுன் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவித்து வருகிறார்.
படம் வெளியான அன்று ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரசிகர்களோடு படம் பார்க்க சென்றார். அல்லு அர்ஜுன் வந்ததால் அவரை பார்ப்பதற்காக திரையரங்கில் ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ரேவதி என்ற 35 வயது பெண் நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகன் காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கும் நேற்று மூளைச்சாவு ஏற்பட்டது.
சிறையில் இருந்து வெளியே வந்த அல்லு அர்ஜுனும் பெண்ணின் குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் நான் செய்ய தயாராக இருக்கிறேன் என்றும், இது ஒரு விபத்து தான். பல ஆண்டுகளாகவே நான் அந்த தியேட்டரில் தான் படம் பார்த்து வருகிறேன். எப்போதும் இப்படி நடந்ததில்லை. எனக்காக ஆதரவு அளித்த எல்லாருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.