மின்னல் வேகத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசு.. டங்ஸ்டன் தீர்மானம் இரவே டெல்லிக்கு அனுப்பிவைப்பு!

post-img

சென்னை: டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வேகம் காட்டி வருகிறது. இது தொடர்பான தனித் தீர்மானம் இன்று காலை சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த தீர்மானம் இப்போது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபை கூடிய நிலையில், அப்போது டங்ஸ்டன் சுரங்க உரிமை தொடர்பாகக் காரசார விவாதம் நடைபெற்றது. அதாவது மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்க உரிமை வழங்கப்பட்டது.
ஆதரவு: அதை ரத்து செய்யவும் மாநில அரசு அனுமதியில்லாமல் சுரங்க ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும் இன்று சட்டசபையில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தும் தனி தீர்மானத்தை மூத்த அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார். இதற்கு திமுக கூட்டணி கட்சியினர் ஆதரவு அளித்தனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக, விசிக, பாமக, மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
பாஜகவை பொறுத்தவரை அக்கட்சியின் சட்டசபை தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், "மத்திய அமைச்சரிடம் சுரங்கம் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த விவகாரத்தில் நல்ல செய்தி வரும்" என்று கூறியிருந்தார். அப்போது தீர்மானத்திற்கு ஆதரவா? எதிர்ப்பா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு நேரடியாகப் பதில் அளிக்காமல் நல்ல செய்தி வரும் என்று மட்டும் கூறி தன்னுடைய உரையை முடித்துக்கொண்டார்.
காரசார விவாதம்: இந்த விவகாரத்தில் திமுக அதிமுக இடையே தான் காரசார விவாதம் நடைபெற்றது. சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். அப்போது எதையும் செய்யாமல் இப்போது மக்கள் போராட்டத்திற்கு பிறகே திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விமர்சித்தார்.
திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததாகக் குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், தான் இருக்கும் வரை இந்த திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டேன் என்று கூறினார். அதைத் தொடர்ந்து அதிமுகவும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் என்று கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இந்த மசோதா இன்று காலை தான் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இரவே இது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அனுப்பிவைப்பு: அதாவது டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டசபையில் தனி தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களில், அதாவது இன்றிரவே அந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஒப்புதலுடன் அரசின் இந்த தீர்மானம் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Post