காங்கிரஸ் மீது கோபம்- 'இந்தியா கூட்டணி' தலைவராக தகுதி படைத்தவர் மமதா பானர்ஜி.. சரத் பவார் ஆதரவு!

post-img

டெல்லி: பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியான 'இந்தியா' கூட்டணிக்கு தலைமை தாங்க தகுதியான தலைவர் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜிதான் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தியா கூட்டணி மீது கடுமையான அதிருப்தியை மமதா பானர்ஜி வெளிப்படுத்தியிருந்தார்.
பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது இந்தியா கூட்டணி. பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரது முன் முயற்சியில்தான் இந்த கூட்டணி உருவானது. இதில் திமுக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, இடதுசாரிகள், காஷ்மீர் கட்சிகள் பங்கேற்றிருந்தன.

ஆனால் இந்தியா கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமாரே, பாஜக பக்கம் தாவிவிட்டார். பாஜகவுடன் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியை காங்கிரஸ் வழிநடத்தி வருகிறது. ஆனாலும் இந்தியா கூட்டணி என்ற அமைப்பு முழுமையாக செயல்படாமல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு; ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு நிலைப்பாடு என ஆளுக்கு ஒரு திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியா கூட்டணியை முழுமையாக ஒழுங்குபடுத்துவதில் காங்கிரஸ் முயற்சிகளையே மேற்கொள்ளவில்லை என்கிற ஆதங்கம் வெளிப்படுத்தப்பட்டும் வருகிறது.
இதனிடையே பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள உத்தவ் சிவசேனாவுடன் முரண்பட்ட சமாஜ்வாதி கட்சி, கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் அறிவித்தது.
இந்த பின்னணியில் கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மமதா, இந்தியா கூட்டணியை வழிநடத்துகிறவர்கள் திறமையானவர்களாக இல்லை. எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கொண்டே சிறப்பாக ஒருங்கிணைப்பேன் என தெரிவித்திருந்தார். மமதாவின் இந்த கருத்து காங்கிரஸை மறைமுகமாக சாடுவதாக இருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

தற்போது மமதா பானர்ஜியின் கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியை வழிநடத்தக் கூடிய தலைமைக்குரிய தகுதி கொண்டவர் மமதா பானர்ஜி என சரத்பவார் கூறியிருப்பது இந்தியா கூட்டணியில் விவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது.

Related Post