டெல்லி: வங்கதேசத்தில் இருந்து வந்த இந்து அல்லாத பிற மதத்தினருக்கு சிகிச்சை அளிக்க எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வங்கதேசத்தில் இந்துக்களை படுகொலை செய்வதால் இந்து அல்லாத பிற மதத்தினருக்கு சிகிச்சை தரக் கூடாது என்பது பாஜகவினரின் கோரிக்கை.
வங்கதேசத்தில் மதஅடிப்படைவாதிகள் கை ஓங்கி இருக்கிறது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. வங்கதேசத்தில் இருந்து பலரும் அகதிகளாக மேற்கு வங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் வங்கதேசத்தைச் சேர்ந்த இந்துக்கள் அல்லாத பிற மதத்தினருக்கு மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று சிகிச்சை அளித்தது. இதனையடுத்து அந்த மருத்துவமனையை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
மேலும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் பாஜகவினர் கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்தனர். அதில், நாடுதான் நமக்கு முதன்மையானது. நமது இந்து சகோதர, சகோதரிகள் வங்கதேசத்தில் கொன்று குவிக்கப்படுகின்றனர். ஆகையால்தான் வங்கதேசத்தில் இருந்து வந்த இந்து அல்லாத பிற மதத்தினருக்கு சிகிச்சை தரக் கூடாது என்கிறோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக கொல்கத்தாவில் 141 படுக்கைகள் கொண்ட தனியார் மருத்துவமனை, வங்கதேசத்தில் இருந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் போவது இல்லை என தெரிவித்திருந்தது. இதேபோல வங்கதேசச்த்தில் இந்திய தேசியக் கொடியை அவமதித்ததால் அந்நாட்டினருக்கு சிகிச்சை அளிக்க முடியாது என கொல்கத்தாவைச் சேர்ந்த வேறு சில மருத்துவமஐகளும் அறிவித்திருந்தன.
அத்துடன் கொல்கத்தாவில் நடைபெற்ற புத்தக கண்காட்சி, சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் இருந்து வங்கதேச பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை. வங்கதேச பிரதிநிதிகளுக்கு விசா வழங்குவதில் சிக்கல் நீடித்ததால் அவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. வங்க மொழி இலக்கிய நிகழ்ச்சியும் வங்கதேச பிரதிநிதிகள் இல்லாமலேயே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.