முஸ்லீம் என்றாலே சமூக விரோதி என நிலவி வரும் கருத்தை ஏற்க முடியாது!

post-img

திருச்சி: இஸ்லாமியர் என்றாலே சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று நிலவி வரும் கருத்து ஏற்கக் கூடியது அல்ல என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்திருப்பதற்கு கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


எந்த வழக்கை விசாரித்த போது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இந்தக் கருத்தை தெரிவித்தது என்பது பற்றியும் இனிகோ கூறியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு;
''சில ஆண்டுகளுக்கு முன்னர் டி.என்.பி.எஸ்.சி கிரேடு- 2 காவலர் நியமனத் தேர்வு நடத்தியது. இதில்,காவலராக பணிபுரிந்து வந்த காஜா ஷெரீப் என்பவர் பங்கேற்றார். தேர்வானோர் பட்டியலில் அவரது பெயர் இருந்தது. ஆனால், அவருக்கு கிரேடு 2 காவலர் பணி நியமனம் மட்டும் வழங்கப்பட வில்லை.


இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். விசாரணையின்போது, 'மனு தாரர் மனித நீதிப் பாசறை' என்ற அமைப்பின் உறுப்பினராக இருந்தார். அது தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதால், மனுதாரருக்கு பணி நியமனம் வழங்கவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பட்டு தேவானந்த்,"எந்த மனிதனுக்கும் சாதி, இனம், நிறம், பிர தேசம் அல்லது மதம் போன்ற சமூக கலாச்சார அடையாளங்களின் அடிப்படையில் எந்த வகையிலும் பாகுபாடு காட்டக்கூடாது. பொறுப்புள்ள ஒவ்வொரு குடிமகனும் நாட்டிற்கு சேவையாற்றுவதில் எந்த தடையும் இல்லாமல் தங்கள் திறனை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.


மனுதாரரான காவல்துறை, காஜா ஷெரீப் தனது பணிக்கால நேர்மை குறித்து எந்தப் பிரச்சனையையும் எழுப்பவில்லை. அரசுப் பணியில் சேர்ந்தவுடன், சட்டப்பூர்வ விதிகளின்படி அவர் தனது பேட்ச்மேட்களுடன் சேர்ந்து பதவி உயர்வுக்கான பரிசீலனைக்கு இயல்பாகவே தகுதியுடையவராக இருப்பார். இதைப் பறிப்பது சமத்துவம் மற்றும் இயற்கை நீதிக்கு எதிரானது.எனவே, பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பணி மூப்பு அடிப் படையில் பதவி உயர்வு, பணப் பலன்கள் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

 

மேலும், "காவலர் ஹாஜா ஷெரீப் அடைந்த மன வேதனையை இந்த நீதிமன்றத்தால் உணர முடிகிறது. இஸ்லாமியர் என்றாலே சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று நிலவி வரும் கருத்து ஏற்கக் கூடியது அல்ல. காவலர் ஹாஜா ஷெரீப் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை ஏற்க முடியாது.


இங்கு யாரும் உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ இல்லை. 21-ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், அதிகாரிகளும் தற்காலத்துக்கு ஏற்ப சிந்தனை, மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். மனிதாபிமானம் இல்லை என்றால் இந்த உலகத்தில் யாருமே வாழ முடியாது" என்றும் நீதிபதி பட்டு தேவானந்த் குறிப் பிட்டுள்ளார்.

 

Related Post