டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து பரிசீலனை செய்வதற்கான நாடாளுமன்ற குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 8-ந் தேதி நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, திமுகவின் பி.வில்சன், செல்வகணபதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
நாட்டின் லோக்சபா மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக ' ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை லோக்சபாவில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு தொடக்க நிலையிலேயே அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மையே இல்லாத பாஜக தாக்கல் செய்த இந்த மசோதாவை எப்படி அனுமதிக்க முடியும்? என திமுகவின் டிஆர் பாலு எம்பி கேள்வி எழுப்பி இருந்தார். இந்த மசோதா நாட்டின் அடிப்படையான கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது எனவும் அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் விமர்சித்திருந்தனர்.
அப்போது லோக்சபாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இம்மசோதா மீது விரிவான விவாதம் நடத்த வேண்டும்; இம்மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என பிரதமர் மோடி விரும்புவதாக தெரிவித்தார். இதனையடுத்து நடத்தப்பட்ட மின்னணு வாக்கெடுப்பில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் 20 பாஜக எம்.பிக்கள் பங்கேற்காமல் இருந்தது பெரும் சர்ச்சையானது.
இதனையடுத்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்த கூட்டுக் குழுவில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி எம்பி, திமுகவின் வில்சன், செல்வகணபதி உள்ளிட்ட 39 பேர் இடம் பெற்றிருந்தனர். பாஜக எம்பி செளத்ரி தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதலாவது கூட்டம் ஜனவரி 8-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.