நீலகிரியில் ரிசார்ட்டுகள்.. துண்டிக்கப்பட்ட யானை வழித்தடங்கள்.. இதுக்கு ஒரு எண்டே இல்லயா? எது தீர்வு

post-img
நீலகிரி: நீலகிரி யானைகள் வழித்தடம் தொடர்பான விவகாரத்தில் கடந்த 2020ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அப்படியானால், யானைகளுக்கான வழித்தடங்களுக்கு நிரந்தர தீர்வு என்ன? இனி நீலகிரியில் ரிசார்ட்கள் அமைய வாய்ப்பில்லையா? நீலகிரி யானைகள் வழித்தடம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்திருந்த உத்தரவில் சில மாற்றங்களை செய்யக்கோரி சில பொதுநல அமைப்புகள், கட்டிட உரிமையாளர்கள் உட்பட சிலர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த விளக்க மனுக்களானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் 2 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. சுப்ரீம் கோர்ட்: அப்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், "சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் அதேபோன்று நாட்டின் காடுகள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கவும் அரசியலமைப்பு விதிகள் அரசுகளுக்கு தெளிவான ஆணைகளை பிறப்பித்து உள்ளது. எனவே நீலகிரி யானைகள் வழித்தடம் தொடர்பான விவகாரத்தில் கடந்த 2020ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது என்று வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஒருபுறமிருந்தாலும், நீலகிரியில் யானைகள் வழித்தடத்தின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்ன என்பது குறித்து, "நீலகிரியை காப்போம்" இயக்கத்தின் தலைவரும், நீலகிரி ஆவணக் காப்பக உரிமையாளருமான வேணுகோபால் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டோம். இதுகுறித்து நம்முடைய "ஒன் இந்தியா" வாசகர்களுக்கு அவர் நம்மிடம் சொன்னதாவது: யானை வழித்தடம்: "யானை வழித்தடம் பிரச்சனை கடந்த 200 வருடமாக நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையாகும். ஆனால், அன்றைய காலங்களில் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தது.. 1815-ல் கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சல்லீவனுக்கு, கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களிடமிருந்து ஒரு புகார் வருகிறது. கடந்த 5 வருஷமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட கொங்குவிலிருந்து வருமானம் குறைகிறதே என்ன காரணம்? யானைகள் பயிர்களை அழிப்பதாக முறையீடுகள் அதிகமாக வருகிறதே" என்று கேட்டார்கள். ஜான் சல்லீவன்: உடனே இதுகுறித்து ஜான் சல்லீவன் மிகத்தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.. அப்போதுதான், தங்களுக்கு முந்தைய காலத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்த திப்புசுல்தான், ஹைதர் அலி போன்ற ஆட்சியாளர்கள், யானைகளால் ஏற்பட்ட பயிரிழப்பு பிரச்சனைகளை எளிதாக சமாளித்ததை கண்டுபிடித்தார். அதாவது, "கண்டச்சார்" என்ற பழங்குடி சிப்பாய்கள் 8000 பேர் கொண்ட குழுவினரை, மைசூரிலிருந்து பிரத்யேகமாக வரவழைத்து, யானைகளால் பிரச்சனை ஏற்படும் இடங்களிளெல்லாம் அவர்களை திப்புசுல்தான், ஹைதர் அலி போன்றோர் குடியமர்த்தினார்களாம்.. யானைகளை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான் அந்த சிப்பாய்களுக்கு வழங்கப்பட்ட பணியாகும். இவர்கள் பழங்குடியை சேர்ந்தவர்கள் என்பதால், யானைகளை எளிதாக கட்டுக்குள்ளும் கொண்டுவந்தனர். மைசூர் சிப்பாய்கள்: ஆனால், பிரிட்டிஷ் ஆட்சி காலம் வந்ததுமே, அந்த சிப்பாய்கள் 8000 பேரையும் மறுபடியும் மைசூருக்கே திருப்பியனுப்பிவிட்டதால், யானைகளின் அட்டூழியம் ஆரம்பமாகியிருப்பது ஜான் சலீவனுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த 8000 சிப்பாய்களில், 2000 சிப்பாய்களை மட்டும் மீண்டும் அழைத்து வந்து யானைகளை கட்டுக்குள் கொண்டு வர ஜான் சலீவன் முயற்சிக்கிறார். ஆனால், மைசூர் ஆட்சியாளர்கள் சிப்பாய்களுக்கு அன்று தந்த ஊதியத்தை, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தர முன்வரவில்லை. இதனால், வடமாநிலத்திலிருந்து ஆட்களை கொண்டுவர நேரிடுகிறது.. தோட்டங்களை நாசம் செய்யும் யானைகளை மட்டும் சுடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. எனினும், இந்த முயற்சியும் தோல்வியை தந்துவிட்டது. தெப்பக்காடு: இறுதியாக யானைகளை தங்கள் தேவைகளுக்கு பழக்கப்படுத்த முடிவு செய்து, பயிற்சி முகாம் தேவை என்பதை உணர்ந்தனர்.. அந்தவகையில், முதன்முதலாக தெப்பக்காட்டில் யானைகளுக்கு பயிற்சியை ஆங்கிலேயர்கள் தந்தார்கள்.. அவைகளில் சிலவற்றை கும்னி யானைகளாக மாற்றி, தங்களது வேட்டை உள்ளிட்ட தேவைகளுக்கு வைத்து கொண்டார்கள்... நீலகிரியில் கட்டுமானத்துக்கு தேவையான தேக்கு உள்ளிட்ட மரங்களை நிலம்பூர், முதுமலை காடுகளிலிருந்து சீகூர் மலைப்பகுதி வழியாக கொண்டு வர இந்த யானைகள் உபயோகப்படுத்தப்பட்டன. இதற்கு அடுத்தபடியாக, சரணாலயத்தையும் ஆங்கிலேயேர்கள் கொண்டுவந்தார்கள். அந்தவகையில், நீலகிரியில்தான் விலங்குகள் பாதுகாப்பு சட்டம் முதல்முதலாக கொண்டுவரப்பட்டது. சுருக்கமாக சொல்லப்போனால், வேட்டையாடுபவர்களே, யானைகளின் பாதுகாப்புக்கும் வழிவகை செய்தனர்.. இதனால், யானை விவகாரம் ஆங்கிலேயர் காலத்தில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. கூடலூர்: ஆனால், சுதந்திரத்துக்கு பிறகு, உணவு தானிய உற்பத்தி அதிகப்படுத்த வேண்டிய தேவை எழும்போது, யானைகளுக்கான சிக்கல்களும் சேர்ந்தே எழுகிறது.. குறிப்பாக கூடலூர் பகுதியில் இந்த பிரச்சனை அதிகமாகிறது.. இதனால் யானைகளுக்கும், விவசாயிகளுக்கும் நேரடி மோதல் ஏற்படுகிறது.. பின்னர், 1970-களில் நீலகிரி சுற்றுலா ஸ்தலமாக உருவெடுத்தது.. 2000-ம் ஆண்டுகளில் ஐடி கம்பெனிகளும் வளர்ச்சியடைய துவங்கின. இதனால் நடுத்தர மக்களின் வருமானமும் உயர்ந்து, சுற்றுலா மற்றும் வனவிலங்குகளை சரணாலயங்களை நோக்கி பொதுமக்கள் படையெடுக்கிறார்கள். இதனால் சுற்றுலா துறையும் வளர்ச்சி பெறுகிறது.. இதையொட்டி ரிசார்ட்டுகளும் மெல்ல மெல்ல பெருக துவங்கிவிட்டன. ஆனால், ரிசார்ட்களை கட்டமைக்க எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. இதனால், யானை வழித்தடம் மீண்டும் விஸ்வரூபமெடுத்தது. நீலகிரி யானைகள்: நீலகிரி யானைகளின் வழித்தடமானது, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என 3 மாநிலத்துக்கும் சேர்ந்த வழித்தட அமைப்பாக உள்ளதால், யானை வழித்தடத்தை எப்படி பாதுகாப்பது என்பது தெரியவில்லை. எனவே, மேற்கண்ட 3 மாநிலங்களும், ஆளுக்கொரு முறையில், இந்த பிரச்சனையை கையாளவும், யானை வழித்தட விவகாரம் மேலும் பூதாகரமாகிவிட்டது. இதில் ரிசார்ட்காரர்களுக்கும் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேர்ந்தது.. இதுசம்பந்தமான பொதுமனு தாக்கல் செய்யப்பட்டு, இறுதியில் யானைதான் முக்கியம் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக அறிவித்தது. இப்போது, 50-க்கும் மேற்பட்ட ரிசார்ட்டுகள் இடிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.. ஆனால், இது நிரந்தர தீர்வா என்பதுதான் இப்போது கேள்வி. ரிசார்ட்கள்: ரிசார்ட்களை ஒரேடியாக தேவையில்லை என்றும் சொல்லிவிட முடியாது. காரணம், தமிழக அரசுக்கு சுற்றுலா என்பது வருவாய் தரக்கூடிய மிகவும் முக்கியமான துறையாகும்.. நீலகிரி மக்களுக்கும் சுற்றுலாதான் வாழ்வாதாரம். இளைய தலைமுறையினருக்கும் சுற்றுலாவின் அவசியத்தை எடுத்து சொல்ல வேண்டியிருக்கிறது. எனவே, இதை சரிசமமாக கையாள வேண்டியது அவசியமாகும். இதைதான் உலக மலைகளின் கூட்டமைப்பு மாநாட்டில் 2010-ல் ஸ்காட்லாந்தில் நான் உரையாற்றினேன். அப்போதுதான், பல காரணங்களால் இந்த ரிசார்ட் பிரச்சனைகள், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளிளெல்லாம் இருப்பது எனக்கு தெரியவந்தது. இதுதான் நீலகிரியிலும் உருவெடுத்திருக்கிறது. சரணாலயம், யானைகள் வழித்தடம் யானைகளுக்கு அந்த இடம் போதுமானதாக இல்லை.. அப்படியானால் இதற்கு பொதுவான தீர்வு தீர்வு என்ன? தீர்வு என்ன: யானைகள் புழங்கக்கூடிய இடத்தை யானைகளுக்கென்றே ஒதுக்கிவிடலாம்.. யானைகளால் மனிதர்களுக்கு எங்கே பாதிப்பு இல்லையோ, அந்த இடத்தை ரிசார்ட்டுக்காக ஒதுக்கலாம். பலநூறு சதுர மைல்கள் கொண்ட சரணாலயங்களில் ஒரு சிறிய பகுதியைகூட ரிசார்ட்டுகளுக்கு தர முடியாதா? என்ற கேள்வி எழுகிறது.. எனவே, ரிசார்ட் அமைப்பதற்கான வழிமுறைகளுடன் இதனை சேர்த்து பின்பற்ற வேண்டும்.. யானைகளுக்கான உணவு, நீர் போன்றவற்றில் ரிசார்ட்களும் ஓரளவு பங்கெடுத்து கொள்வது அவர்களது பொறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தும்.. அதேபோல, வனவிலங்குகளின் முக்கியத்துவத்தை சுற்றுலா பயணிகளும் அறிந்து கொள்ளும் வகையில், மலைப்பிரதேசங்களில் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வகுக்க வேண்டும்" என்று வேணுகோபால் நம்மிடம் தெரிவித்துள்ளார்.

Related Post