நடப்போம் நலம் பெறுவோம்.. சென்னை மழையில் குடையோடு வாக்கிங் போறது யாரு பாருங்க

post-img

சென்னை: பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் கொட்டும் மழையில் குடையோடு நடைபயிற்சி மேற்கொண்டனர். பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும் மழையோடு நடைபயிற்சி மேற்கொண்டனர்.


நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் 'நடப்போம் நலம் பெறுவோம்' (Health Walk) என்ற சிறப்பு திட்டத்தை தமிழக சுகாதாரத் துறை செயல்படுத்துகிறது. இன்று காலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இத்திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


ஜப்பானில், மக்களிடையே நடை பயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த ஹெல்த் வாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகள் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும். கிலோ மீட்டர் என்பது 10 ஆயிரம் அடிகளாகும். தினமும் ஒருவர் பத்தாயிரம் அடிகள் நடந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால், ஹெல்த் வாக் என்கிற பெயரில், 8 கி.மீ., தூரத்துக்கு சாலைகளை அமைத்துள்ளனர்.


சென்னையில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் மக்கள் தொகையும், வியாபார ஸ்தலங்களும் பொது இடங்களை மெல்ல மெல்ல சுருக்கி வருகிறது. இதன் காரணமாக விளையாட்டு மைதானங்கள் புதியதாக உருவாவதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. இது இளைஞர்களுக்கும், முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதனை சரி செய்ய சென்னை அடையாறில் இருந்து பெசன்ட் நகர் வரை 8 கிலோமீட்டர் நீள நடைபாதையை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.


இதனையடுத்து நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் வசதிக்காக சென்னை அடையாறில் இருந்து பெசன்ட் நகர் வரை 8 கிலோமீட்டர் நீள நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை இன்று 4ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்றைய தினம் அமைச்சர் உதயநிதி நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.


இந்த பாதையானது அடையாறு எல்பி சாலை மேம்பாலம் அருகே உள்ள டாக்டர் முத்துலட்சுமி பூங்காவில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து தியோசாபிகல் சொசைட்டி அமைந்துள்ள பெசன்ட் அவென்யூ வழியாக 3வது அவென்யூவில் வலதுபுறம் சென்று இடதுபுறமாக 5வது அவென்யூவில் சென்று எலியட்ஸ் கடற்கரையை அடைகிறது. எலியட்ஸ் கடற்கரையின் முடிவில் அன்னை வேளாங்கண்ணி சாலையில் வலதுபுறம் திரும்பி, மீண்டும் 3வது அவென்யூவுடன் இணைக்கும் 2வது அவென்யூவில் வலதுபுறம் திரும்பி மீண்டும் வந்த இடத்திற்கே வருகிறது.


தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ஹெல்த்வாக் சாலை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேக சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை முதலே கனமழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் நடைபயிற்சி செய்தனர். குடையோடு அவர்கள் வாக்கிங் செல்ல கூடவே பல பிரபலங்களும், அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் இளைஞர்களும் மழையில் நனைந்தபடியே வாக்கிங் சென்றனர்.


பெசன்ட் நகரில் நடைபயிற்சி செல்பவர்களுக்கு வாகனங்கள் நிறுத்தம், ஓய்வு இருக்கைகள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. செல்லப் பிராணிகளுடன் நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதிசெய்யப்பட்டுள்ளது. மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் குறித்த மருத்துவ பரிசோதனை முகாம் இங்கு நடத்தப்பட உள்ளது.

 

Related Post