சென்னை: தங்கத்தின் விலை 2023ல் 15% உயர்ந்தது. இதை தொடர்ந்து 2024ல் தங்கத்தின் விலை 22% உயர்ந்துள்ளது. இதனால் இந்தியக் குடும்பங்கள் தங்கத்தை பட்ஜெட்டுக்குள் வாங்குவதற்கு வசதியாக குறைந்த காரட் நகைகளைத் தேர்வு செய்ய தொடங்கி உள்ளனர்.
இதனால் 18 காரட் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர், இது பாரம்பரியமான 22 காரட்டை விட கிட்டத்தட்ட 20% குறைவு. குறைவான விலையில் கிடைக்கும். அதேபோல் இந்தியாவில் விரைவில் 9 கேரட் தங்கத்திற்கு ஹால் மார்க் முத்திரையுடன் அனுமதி அளிக்கப்பட உள்ளது. 2கே கிட்ஸ் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதால்.. அவர்கள் எளிதில் தங்கம் வாங்குவதை ஊக்குவிக்கும் விதமாக 9 கேரட் தங்கத்திற்கு ஹால் மார்க் முத்திரையுடன் அனுமதி அளிக்க உள்ளனர்.
2022 ஆம் ஆண்டில், 14KT, 18KT, 20KT, 22KT, 23KT மற்றும் 24KT ஆகிய ஆறு தங்க பிரிவுகளுக்கு இந்திய தரநிலைப் பணியகம் (BIS) ஹால்மார்க் செய்வதை கட்டாயமாக்கியது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் ஆகும். இந்தியாவின் தங்க தேவை அடுத்த ஆண்டு 750 டன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை, தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முந்தைய ஆண்டை விட 2024 முதல் பாதியில் இந்திய தங்க தேவை 1.5% அதிகரித்துள்ளது. இதையடுத்தே 9 கேரட் தங்கத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தங்க நகை வர்த்தகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் உட்பட அனைத்து முக்கிய அமைப்புகளுடன் நடந்த இறுதிச் சுற்று ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு சில மாதங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இனி தங்கம் வாங்கும் போது 9 KT தங்கப் பொருட்களுக்கு உடனடி தூய்மைச் சான்றிதழ் வழங்கப்படும். ஆகஸ்ட் 2024 இல் 22 KT தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹68,000 ஆகவும், 9 KT தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹25,000 முதல் ₹30,000 ஆகவும் இருந்தது. ஒப்பீட்டளவில் 9 கேரட் விலை குறைவாக இருக்கும்.
ஹால்மார்க்: செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், குறைந்த காரட் தங்க நகைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) கூற்றுப்படி, 2022 இல் இந்தியாவில் செயின் பறிப்பு சம்பவங்கள் உயர்ந்து உள்ளன. இந்த எண்ணிக்கை 9,278 ஆக உயர்ந்துள்ளது. இது 32.54% அதிகரிப்பு ஆகும். 2021 இல் 7,000 இல் இருந்த செயின் பறிப்பு சம்பவங்கள் உயர்ந்து உள்ளது.
இதற்கு முன்னதாக, தங்க சந்தையில் 22KT ஆதிக்கம் செலுத்தப்பட்டது, பின்னர் அது 18KT ஆக மாறியது, இப்போது தங்க சந்தையில் 14KT ஆதிக்கம் செலுத்துகிறது. மலிவு விலை தங்கம் நுகர்வோர் மத்தியில் பிரபலமடைந்து வருவதால் சந்தை மேலும் 9KT நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது. நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்க 9 KT இன் கட்டாய ஹால்மார்க்கிங்கை இதையடுத்து அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
காரட் தங்கம்: காரட் என்பது தங்கத்தின் தூய்மையை அளக்கப் பயன்படும் ஒரு அலகாகும், இது 9 மற்றும் 24 க்கு இடைப்பட்ட எண்ணாக பொதுவாக இருக்கும். காரட் அதிகமாக இருந்தால், தங்கம் தூய்மையானது.
24 காரட்: தூய தங்கம், வேறு எந்த உலோகமும் இல்லை
18 காரட்: 75% தங்கம் மற்றும் 25% செம்பு அல்லது வெள்ளி போன்ற மற்ற உலோகங்கள்
22 காரட்: 91.67% தூய தங்கம், வெள்ளி, துத்தநாகம், நிக்கல் அல்லது செம்பு போன்ற 2 பாகங்கள் மற்ற உலோகங்கள் சேர்க்கப்படும்.
14 காரட்: 58.3% தூய தங்கம் மற்றும் 41.7% மற்ற உலோகங்கள்
9 காரட் தங்கம் என்பது 37.5% தூய தங்கம் மற்றும் 62.5% வெள்ளி அல்லது தாமிரம் போன்ற மற்ற உலோகங்களின் கலவையாகும்.
இது தூய்மை குறைவான தங்கம் என்றாலும் விலை மிக குறைவாக எல்லோராலும் வாங்கும் வகையில் இருக்கும்.