சென்னை: மெய்யழகன் படத்தில் அன்பை மட்டுமே வாரிவழங்கும் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்து இருப்போர். அதுபோல தான் நமது மும்பையில் இந்தியா பேனாநண்பர் பேரவையை நடத்தி வரும் மா. கருண் மனிதநேயத்தை உலகிற்கே போதித்து வருகிறார். மும்பையில் வசித்து வரும் இந்த மெய்யழகன் யார்.. இவரது பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மா. கருண்.. இவர் இந்தியா பேனாநண்பர் பேரவையை நிறுவி, அதன் தலைவராகவும் இருந்து வருகிறார்..
கன்னியாகுமரியில் பிறந்து வளர்ந்த இவர், 1971ம் ஆண்டு மும்பை சென்றுள்ளார். 1980ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். சாதாரண ஊழியராக அதில் பணியில் சேர்ந்த கருண், 32 ஆண்டுகள் பணியாற்றி மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக 2012ல் ஓய்வு பெற்றார்.
அப்படி ஏர் இந்தியாவில் பணியாற்றிய போது 1993 மார்ச் 12ம் தேதி மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு இவரது வாழ்க்கையை மொத்தமாக மாற்றி போட்டு இருக்கிறது. அந்த சம்பவத்தில் இவர் வேலை செய்து வந்த ஏர் இந்தியா அலுவலகத்திலும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அப்போது இவர் நண்பர்கள் சிலரையும் இழந்துள்ளார்.
அப்போது அவர் அங்குக் கண்ட காட்சியே மனிதநேயம் என்றால் என்ன என்பதைச் சிந்திக்க வைத்து இருக்கிறது. அதன் பிறகு அன்பு, நட்பு, மனிதநேயத்தைப் பரப்ப அமைப்பைத் தொடங்கலாம் எனப் பலருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.
இது தொடர்பாக "ஒன்இந்தியாதமிழிடம்" அவர் கூறுகையில், "அப்போது மெயில், போன் என எதுவும் இருக்காது. தினசரி குறைந்தது 80 பேருக்கு லெட்டர் எழுதுவேன். பல நண்பர்கள் எனக்கு ஒத்துழைப்பு அளித்தார்கள். கடிதம் மூலமாகவே அவர்களை ஒருங்கிணைத்தேன். இதற்கே 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1995ம் ஆண்டு பேனாநண்பர் பேரவையைத் தொடங்கினோம்" என்றார்.
அதன் பிறகு மனித நேயத்தைப் பரப்ப பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடர்ச்சியாக நடத்தி, மும்பையில் நிஜமான மெய்யழகனாக வாழ்ந்து வரும் இவரது ஸ்பெஷல் பேட்டியை இந்த வீடியோவில் காணுங்கள்.