சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நிவாரணமாக வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் வங்கக்கடலில் உருவாகும் புயல் தமிழகத்தை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கிவிடுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களை குறிவைத்து தாக்கியது. புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், அதன் வேகம் இயல்பை விட குறைவாக இருந்தது. எனவே, அது விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடுமையான மழைப்பொழிவை கொடுத்தது.
இது பெரும் வெள்ளத்தை உருவாக்கியது. வெள்ளம் சில மாவட்டங்களில் வடிந்துவிட்டாலும் கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இது வடியவில்லை. இன்னமும் மக்கள் பேரிடர் மீட்பு முகாம்களில்தான் தங்கியுள்ளனர். இப்படி இருக்கையில் இம்மூன்று மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தவிர மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்றும், முற்றிலுமாக பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடு வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் பேரிடர் நிவாரண நிதிக்கு பல்வேறு அமைப்புகளும், தனி நபர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். அந்த வகையில் அமரன் திரைப்பட நாயகன் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்தை நிவாரணமாக வழங்கியுள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage