பாகனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, ஒரு குழந்தையைப் போல நடந்துகொள்ளும் கோவில் யானைகளும் வனத்துறைக்குச் சொந்தமான முகாம்களில் உள்ள பயிற்சி பெற்ற கும்கி யானைகளும், திடீரென பாகன்களையும் பிறரையும் தாக்கிக் கொல்வது, அவ்வப்போது நடந்து வருகிறது.
இவ்வாறு பாகனையே யானைகள் கொல்வதற்கு மதம் பிடிப்பதே காரணமென்று மக்களிடம் பொதுவான புரிதல் உள்ளது. ஆனால் மதம் பிடிப்பதற்கும், இதுபோன்று யானைகள் கோபத்தில் திடீர் தாக்குதல் நடத்துவதற்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதே யானை நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
யானைகளின் தன்மை, மதம் பிடிப்பது ஏன், அதன் அறிகுறிகள், அவற்றைக் கையாள வேண்டிய முறை, கோவில் யானைகளுக்குக் கோபம் வருவதற்கான காரணங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள யானை ஆராய்ச்சியாளர்கள், யானைகளைக் கையாளும் கால்நடை மருத்துவர்கள், காட்டுயிர் ஆர்வலர்கள் மற்றும் யானை முகாம்களின் ஊழியர்கள் பலரிடமும் பிபிசி தமிழ் பேசியது.
பெண் யானையுடன் இணை சேர்வதற்காக, ஆண் யானைகளின் உடலில் உருவாகும் ஹார்மோன் மாற்றங்களால் அவற்றின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களே யானைக்கு மதம் பிடிப்பதாகக் குறிப்பிடப்படுகின்றன.
ஆண் யானைகளுக்கு மதம் பிடிப்பதைத்தான் பொதுவாக ‘மஸ்த்’ (மதநீர்) என்று சொல்கிறார்கள். ஆண் யானைகளுக்கு டெஸ்டோஸ்டெரோன் (Testosterone) என்ற ஹார்மோனும், பெண் யானைகளுக்கு ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோனும் சுரக்கின்றன. இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஆண் அல்லது பெண் யானைகளின் உடலில் இத்தகைய மாற்றங்கள் நிகழ்வதாக யானை உள்ளிட்ட காட்டுயிர்களைக் கையாளும் கால்நடை மருத்துவர் மனோகரன் மற்றும் யானைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள உதவிப் பேராசிரியர் பாஸ்கரனும் கூறுகின்றனர்.
மதம் பிடித்த யானைகளிடம் சில அறிகுறிகள் தென்படும்; அதைப் பார்த்து, அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும். இல்லாவிடில் அது பெரும் ஆபத்தாக முடியுமென்று எச்சரிக்கிறார்கள் கால்நடை மருத்துவர் மனோகரன்.
‘‘ஆண் யானை ஒன்றுக்கு ‘மஸ்த்’ ஏற்பட்டுவிட்டால், மதக் கண்ணில் (கண்ணுக்கும், காதுக்கும் இடையிலிருந்து) நீர் வழியும். மதக்கண் வீங்கியிருக்கும். ஆணுறுப்பு அடிக்கடி கீழிறங்கும். சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் கழிக்கும். பெண் துணையைத் தேடிக் கொண்டேயிருக்கும். பார்ப்பதற்கே ஆக்ரோஷமாகத் தென்படும்.
காட்டிலுள்ள ஆண் யானை, இன்னொரு ஆண் யானையிடம் தனது பலத்தை நிரூபிக்கச் சண்டையிடும். அதைப் பார்க்கும்போது ‘மஸ்த்’ ஆகியிருப்பதை அறிந்துகொள்ள முடியும்’’ என்கிறார் யானைகள் சிகிச்சையில் பெரும் அனுபவம் பெற்றுள்ள ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் மனோகரன்.
தமிழ்நாடு வனத்துறையில் பணியாற்றி, நுாற்றுக்கணக்கான யானைகளுக்கு சிகிச்சை அளித்து, ஏராளமான யானைகளின் பிரேத பரிசோதனைகளையும் செய்துள்ள கால்நடை மருத்துவர் மனோகரன், யானைகள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.
ஆண் யானைகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படும் உடலியல் நிகழ்வுதான் மஸ்த் என்று விளக்குகிறார் மயிலாடுதுறை ஏவிசி கல்லுாரியின் உதவிப் பேராசிரியர் என்.பாஸ்கரன்.
உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் பாஸ்கரன், சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றிய அமைப்பில் (IUCN-SSC) யானைகள் சிறப்பு நிபுணர் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
“காட்டிலுள்ள ஆண் யானைக்கு மஸ்த் ஏற்பட்டுவிட்டால், அது யானைக் கூட்டத்தில் தனக்கான பெண் யானையைத் தேடிச் சென்று இணை சேரும். ஒவ்வொரு ஆண் யானையின் ஆரோக்கியத்தைப் பொறுத்தும், இந்த மஸ்த் காலம் வேறுபடும்” என்கிறார் பாஸ்கரன்.
அவரது கூற்றுப்படி, யானையின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து, 15 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரை ‘மஸ்த்’ இருக்கும்.
அதேவேளையில், ஆரோக்கியமற்ற, நலிவுற்ற சில ஆண் யானைகளுக்கு மஸ்த் ஏற்படாமல் இருக்கவும் வாய்ப்புண்டு எனக் கூறும் பாஸ்கரன், தோட்டங்களில் பயிர்களை அதிகமாகச் சாப்பிட்டு ஆரோக்கியமாகவும் மிகவும் பலமாகவும் உள்ள ஆண் யானைக்கு ஆண்டுக்கு இருமுறைகூட ‘மஸ்த்’ ஏற்படுவதுண்டு’’ என்று விளக்கினார்.
பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழிடம் பேசிய யானை ஆய்வாளர்களும் கால்நடை மருத்துவர்களும் ஒரு யானையின் உணவுமுறை குறித்து விரிவாகத் தெரிவித்தனர்.
அவர்களது கூற்றுப்படி, பொதுவாக ஒரு யானை, அதனுடைய மொத்த எடையில் 5 சதவீதம் அளவுக்கு தினசரி உணவு உட்கொள்ளும். பிறக்கும் யானை 100 கிலோ இருந்தால், 5 கிலோ உணவைச் சாப்பிடும்.
பெரிய யானைகள் 2 முதல் இரண்டரை டன் எடையிருக்கும் என்பதால், அதற்கேற்ப உணவு தேவைப்படும். உணவு மற்றும் நீரைத் தேடி அந்த யானைகள் காட்டில் தினமும் 8–10 கி.மீ. துாரம் நடக்கும். இடையிடையே ஓய்வெடுக்கும்; தண்ணீர் குடிக்கும்.
பொதுவாக பெரிய யானைக்கு நாளொன்றுக்கு 150–200 கிலோ உணவும், 100–150 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும்.
யானைகள் எங்கிருந்தாலும் அது காட்டு விலங்குதான் என்று கூறும் யானைகள் ஆராய்ச்சியாளர் ராமகிருஷ்ணன், எங்கு இருந்தாலும் அதன் தன்மை மாறாது, அதை அந்த விதத்தில்தான் அணுக வேண்டும் என்கிறார்.
காடுகளில் பல மைல் துாரம் நடக்கும் யானைகள், கோவில்களில் ஒரே இடத்தில் கட்டி வைக்கப்படுகின்றன. நான்கு சுவர்கள் அடங்கிய ஒரு கூரைக்குள் நகராமல் இருப்பதற்காக, கால்களிலும் சங்கிலிகள் போடப்படுகின்றன.
பாஸ்கரனின் கூற்றுப்படி, திறந்தவெளியில் மண் தரையில் உருண்டு புரள்வது யானைகளின் இயல்பு. ஆனால் “கோவில்களில் யானைகள் நகராமல் இருப்பதற்காக, ஒரு கூடாரத்திற்குள் கட்டாந்தரையில், இரண்டு கால்களிலும் சங்கிலிகளைப் போட்டு கட்டிப் போடுகிறார்கள்,” என்றார்.
மேலும், “கோவில் யானை நடக்க நினைக்கும்போது, அதைக் கட்டிப் போட்டிருந்தால் மன அழுத்தத்திற்கு உள்ளாகும். அதேபோல, காட்டு யானைகள் காலத்திற்கு ஏற்ற உணவுகளை உண்ணும். ஆனால் கோவிலில் தினசரி ஒரே மாதிரியான உணவைக் கொடுப்பார்கள். இவையும் கோவில் யானைகளின் கோபத்திற்கு முக்கியக் காரணிகளாகின்றன” என்று விளக்கினார்.
மனிதர்களைப் போலவே யானைகளுக்கும் தனித்தனி குணாதிசயங்கள் இருப்பதாக, யானைகள் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு நபர் எப்போதும் கோபம் நிறைந்தவராகவும், மற்றொரு நபர் எப்போதும் நிதானத்தோடு இருப்பவராகவும் இருப்பது போலவே ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் இருக்கின்றன. அதேபோல ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு விதமான செயல்பாடுகள் பிடிக்காது என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உதாரணமாக, “தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள முதுமலை என்ற யானைக்கு, அதற்குப் பின்னால் யார் நடந்தாலும் பிடிக்காது. தனக்கு ஆபத்து இருப்பதாகக் கருதி, மிக வேகமாகத் திரும்பும். அந்த நேரத்தில் இடையில் யாராவது இருந்தால் அவர்கள் நிச்சயம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு’’ என்கிறார் கால்நடை மருத்துவர் மனோகரன்.
மதம் பிடிக்கும் யானைக்கும், கோவில் யானைகளுக்கு வரும் கோபத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதே யானை ஆராய்ச்சியாளர்களின் பொதுக் கருத்தாக உள்ளது.
சுய பாதுகாப்பு கருதி கோபத்தை வெளிப்படுத்தும் யானை, அடுத்த சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவதை பல்வேறு யானைகளின் பாகன்களும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளனர்.
சமயபுரம் கோவில் யானை மசினி, பாகனைக் கொன்ற அடுத்த 2 நிமிடங்களில் அந்த யானைக்கு மிக நெருக்கமாகச் சென்று, கொய்யாப் பழத்தைக் கொடுத்துள்ளார் மருத்துவர் மனோகரன். ஆனால் அவரை எதுவும் செய்யவில்லை.
அதேபோல, திருச்செந்தூரில் சமீபத்தில் நடந்த சம்பவத்திலும் இருவரைக் கொன்ற தெய்வானை யானையும் அடுத்த நிமிடமே இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது கவனிக்கத்தக்கது.
தனக்குப் பழக்கமில்லாத நபரின் தொடுதல், வாசம், வெளிச்சம், சத்தம் எது வேண்டுமானாலும், ஒரு யானையைக் கோபப்படுத்திவிட வாய்ப்புள்ளது என்கிறார் கால்நடை மருத்துவர் மனோகரன்.
“பாகனைத் தவிர, வேறு யார் யானையைத் தொட்டாலும் சில யானைகளுக்குப் பிடிக்காது. சிலர் யானைக்கு அருகில் நின்று ‘செல்ஃபி’ எடுக்கும்போது அதிலிருந்து வரும் வெளிச்சம் அல்லது ‘க்ளிக்’ என்ற சத்தம்கூட அதற்கு எரிச்சலை ஏற்படுத்தி அல்லது அச்சமூட்டி தாக்குதல் நடத்தக் காரணமாகி விடும்” என்கிறார் அவர்.
தமிழ்நாட்டில் கோவில்களில்தான் வளர்ப்பு யானைகள் அதிகமுள்ளன. பெரும்பாலான கோவில்களில் பெண் யானைகளே உள்ளன. கேரளாவில் தனியார் வசம் பெரும்பாலும் ஆண் யானைகளே வளர்க்கப்படுகின்றன.
அங்கு திருவிழா மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகளில் யானைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தந்தங்கள் மற்றும் கம்பீரத்திற்காக ஆண் யானைகளை கேரள மக்கள் அதிகம் விரும்புவதாகச் சொல்கிறார் உதவி பேராசிரியர் பாஸ்கரன்.
ஆண் யானைகளுக்கு அங்கு வசூலிக்கப்படும் கட்டணமும் அதிகம். வருவாய்க்காக அவற்றைப் பல மணிநேரம் நிற்க வைப்பது, ஓய்வின்றி அடுத்தடுத்து கூட்டத்தில் நடக்க வைப்பதால் யானைகள் கோபமாகின்றன.
‘‘எந்த யானையும் உடனடியாகத் தாக்குதல் நடத்தாது. முதலில் கீழ்ப்படியாமல் முரண்டு பிடிக்கும். அப்போதே அதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், அவை முதலில் பாகன்களையே அடிக்கும். அதற்குக் குறுக்கே யார் சென்றாலும் ஆபத்துதான்’’ என்கிறார் பாஸ்கரன்.
பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பதில்லை என்றாலும், இணை சேரும் காலகட்டத்தில், பிரசவ காலத்தில் அல்லது கருக்கலைப்பு ஏற்பட்டால் மிகவும் கோபமாகிவிடும் என்கிறார் உதவிப் பேராசிரியர் பாஸ்கரன்.
அதோடு, மனிதர்களின் செயல்பாடுகள், உணவுப் பற்றாக்குறை, உடல் பாதிப்பு அல்லது இருப்பிடச் சூழலால் பெண் யானைக்கு ஏற்படும் மன அழுத்தம் (Stress) அதைக் கோபமாக்கி, பிறரைத் தாக்குவதற்குத் துாண்டுவதாகக் கூறுகிறார் யானை ஆராய்ச்சியாளரும், ஊட்டி கலைக் கல்லுாரி காட்டுயிர் உயிரியல் துறைத் தலைவருமான ராமகிருஷ்ணன்.
இவைபோக, “ஆண் யானைகளைப் போலவே பெண் யானைகளுக்கும் ஹார்மோன்கள் அதிகரிக்கும்போது மதக்கண்ணில் நீர் வழியும். ஆனால் ஆண் யானை அளவுக்கு ஆக்ரோஷமாக இருக்காது” என்கிறார் கால்நடை மருத்துவர் மனோகரன்.
புலி, சிறுத்தை, கழுதைப் புலி போன்ற மாமிச உண்ணிகளுக்கு மற்றோர் உயிரைக் கொல்வதற்குரிய பல அம்சங்கள் உடலில் இருக்கும்.
வேட்டையாட வேகமாக ஓடுவதற்கேற்ற பாதங்கள், கொல்வதற்கான நகங்கள் எனப் பலவிதமான பாகங்களும் இயற்கையாகவே அமைந்திருக்கும்.
அடிப்படையில் யானை ஒரு தாவர உண்ணி. அதற்கான உடல் அமைப்பும் அப்படித்தான் இருக்கும். யானையின் உடல் அமைப்பு முற்றிலும் மாறுபட்டது. யானையின் தந்தம் மண்ணைத் தோண்ட உதவும். தும்பிக்கை, மூச்சு விடவும், தண்ணீர் குடிக்கவும், தாவரங்களைப் பறித்து உண்ணவும் பயன்படும். பெரிய கால்கள், பாதங்கள், நீண்ட துாரம் நடப்பதற்கான அமைப்பைக் கொண்டவை.
‘‘யானையின் உடல் உறுப்புகள் எதுவும் அடுத்த உயிரைக் கொல்வதற்கான உறுப்புகளாக இருப்பதில்லை. ஆனால் சுய பாதுகாப்பு என்று வரும்போது, தந்தம், தும்பிக்கை, கால்கள் ஆகிய 3 உறுப்புகளையுமே பயன்படுத்தித் தனது கோபத்தை வெளிப்படுத்தும் அல்லது தற்காத்துக்கொள்ளத் தாக்குதல் நடத்தும்’’ என்கிறார் கால்நடை மருத்துவர் மனோகரன்.
கோவில் மற்றும் முகாம்களில் உள்ள யானைகளிடம் இருந்து சற்றுத் தள்ளியிருப்பதே, மனிதர்கள், யானைகள் என இருதரப்புக்கும் நல்லது என்பதே யானை நிபுணர்கள் பலரது ஒருமித்த அறிவுறுத்தலாக உள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage