தவறான சிகிச்சை காரணம் அல்ல... உயிரை காக்கவே குழந்தையின் கை அகற்றம்

post-img

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குழந்தையின் கை பாதிக்கப்பட தவறானசிகிச்சை காரணமல்ல என்றும், மூளைத்தொற்றால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரைக் காக்கவே கையை அகற்றியதாக மருத்துவர்களின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர்-அஜிஸா தம்பதியினர், தங்களின் ஒன்றரை வயது மகன் முகமது மகிரை, தலையில் நீர் கோர்த்தல் பிரச்னைக்காக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். அங்கு, குழந்தையின் வலது கையில் ‘ட்ரிப்ஸ்’ போடப்பட்டுள்ளது. தவறான சிகிச்சையால் அந்த கை செயலிழந்து அழுகிவிட்டதாகவும், பின்னர், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், குழந்தையின் வலது கை அகற்றப்பட்டதாகவும் குழந்தையின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை தமிழ்நாடு அரசு கடந்த ஒன்றாம் தேதி அமைத்தது. அதன்படி, மருத்துவமனை ஊழியர்கள், குழந்தையின் பெற்றோரிடம் அந்தக் குழு விசாரணை நடத்தியது. அதன் விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனேயே காலதாமதமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Venflon ஊசி தமனியில் போடவில்லை என்பது பெற்றோர்களின் வாக்குமூலம் மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலம் வாயிலாக உறுதி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மருந்து கசிவினால், இரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pseudomonas கிருமியினால் ஏற்படும் மூளைத் தொற்று, ரத்தநாளத்தை பாதித்ததால் இந்த குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதாகவும், உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post