தேனி : கார்த்திகை மார்கழியில் சபரிமலை போகப்போறீங்களா.. தேனி ரயிலை மிஸ் பண்ணிடாதீங்க.. சென்னையில் இருந்தோ அல்லது வேலூரில் இருந்தோ, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை என தமிழ்நாட்டின் ஒரு பாதி மக்கள் எளிதாக இனி சபரிமலை போய் வர முடியும். தேனி வரை ரயிலில் சென்று அங்கிருந்து 3 மணி நேரத்தில் சபரிமலைக்கு போய்விட முடியும்.
சபரிமலைக்கு செல்ல தமிழ்நாட்டில் 3 வழிகள் உள்ளன. குற்றாலம், செங்கோட்டை வழியாக நுழைந்து அப்படியே சபரிமலை வரலாம். இதேபோல் கோவை வழியாக கேரளாவிற்குள் நுழைந்து கோட்டயம் வழியாக வரலாம். மூன்றாவது வழி, திண்டுக்கல் தேனி வழியாக வருவது.
ஆனால் மிக எளிதான வழி என்றால், அது திண்டுக்கல், தேனி, குமுளி வழி தான். இதுதான் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான மக்கள் வரும் வழி ஆகும். இதற்கு சில காரணங்களும் உண்டு. சபரிமலை பயணத்தை முடித்துவிட்டு பக்கத்தில் இருக்கும் வாகமன், தேக்கடி, இடுக்கி அணை, சுருளி போன்றவற்றிருக்கு போக முடியும்.இதேபோல் கொடைக்கானல், மூணாறு போகவும் முடியும். ஆன்மீக யாத்திரிகர்கள் பலர் சபரிமலை போன கையோடு பழனிக்கும் செல்வதும் வழக்கம். அந்த வகையில் பழனி செல்ல குமுளி தேனி வழியாக செல்வதே எளிதாக இருக்கும்.
சபரிமலைக்கு 41 நாட்கள் விரதம் இருந்து கார்த்திகை , மார்கழி, தை ஆகிய மாதங்களில் பலர், கார், வேன், பேருந்துகளில் சபரிமலைக்கு செல்வார்கள். ரயிலில் சென்றால் கோட்டயம் அல்லது செங்கனூர் சென்று அங்கிருந்து பேருந்தில் செல்லலாம். இதுதான் இப்போது வரை வழியாக உள்ளது.
இந்நிலையில் மதுரையில் இருந்து தேனி , போடிநாயக்கனூருக்கு போடப்பட்ட பாதை, சபரிமலை பக்தர்களின் ரயில் பயணத்தை அப்படியே மாற்றி உள்ளது. ஏனெனில் சென்னையில் இருந்து போடிநாயக்கனூர் செல்லும் புதிய ரயில் வழித்தடத்தில் சபரிமலை பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் செல்கிறார்கள். சபரிமலைக்கு போடி ரயிலில் வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
பக்தர்கள் பலரும் மாதாந்திர சிறப்பு பூஜைக்காக போடி ரயிலில் வரத் தொடங்கி உள்ளார்கள். ஐப்பசி மாதத்திற்கு நடை திறப்பு அக்.17 திறக்கப்பட்டது. வரும் 22-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளார்கள். இதற்காக பக்தர்கள் தேனிக்கு ரயிலில் பயணித்து வருகிறார்கள்.இந்நிலையில் கார்த்திகை , மார்கழி மாதங்களில் பலர் தேனி ரயிலை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
ஏனெனில் தேனியில் இருந்து குமுளி சென்றோ அல்லது நேரடியாக தேனியில் இருந்தோ சபரிமலைக்கு பேருந்தில் சென்றுவிட முடியும். சில மணி நேரத்தில் சபரிமலைக்கு போய்விட முடியும். எனவே இந்த முறை சபரிமலை போகிறவர்கள், தேனி ரயிலில் டிக்கெட் இருக்கிறதா என்பதை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.