இப்படியே பண்ணீங்கனா.. உங்க ஆபிசுலேயே தங்கிடுவோம்! என்ஐஏவை கண்டித்த தமிழ்நாடு முஸ்லிம்

post-img

கோயம்புத்தூர்: இரண்டு தினங்களுக்கு முன்னர் கோவை உட்பட தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ சோதனை மேற்கொண்ட நிலையில், என்ஜஏ-வை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கோவை உக்கடம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதியன்று கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கார் ஒன்று வெடித்து சிதறியது. இது தொடர்பான வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி கோவை, தென்காசி, சென்னை என தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீரென சோதனையை மேற்கொண்டனர். கோவையில் மட்டும் உக்கடம், கவுண்டம்பாளையம், ஆர்எஸ்புரம், கிணத்துக்கடவு என 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.


அரபிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருப்போர் என பலர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. கோவை கோட்டை பகுதி ராமசாமி நகரில் உள்ள 82வது வார்டு திமுக கவுன்சிலர் முபாசீரா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் என்ஐஏவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கோவை உக்கடம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மத்திய அரசும், என்ஐஏவும் இஸ்லாமிய இளைஞர்களை குறி வைப்பதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். விடியற்காலையில் 5 மணிக்கு என்ஐஏ அதிகாரிகள் வீட்டு கதவை தட்டி குடும்பத்தினரை தொந்தரவு செய்வதாகவும், இப்படியான தேவையற்ற ரெய்டுகள் காரணமாக சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அந்த பகுதியில் வசிக்க முடிவதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், என்ஐஏ அமைப்பு பாஜகவின் ஏஜெண்டாக செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளனர்.


இதேபோன்ற நடவடிக்கை தொடர்ந்தால் கோவையில் உள்ள என்ஐஏவின் தற்காலிக அலுவலகத்தில் குடியேறுவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த போராட்டத்தில் 35 பெண்கள் என மொத்தமாக 160 பேர் பங்கேற்றுள்ளனர்.


கடந்த அக்டோபரில் அரபிக் கல்லூரியில் நடந்த சோதனையின்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல கார் வெடிப்பில் பலியான நபரும் இதே கல்லூரியில் பயின்றிருக்கிறார். இதன் அடிப்படையில் இக்கல்லூரியில் பயிலும் முக்கியமான மாணவர்களிடமும், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Post