சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் 2 ஆயிரம் பணம் எடுத்த போது, 5000 ரூபாய் வந்துள்ளது. இதனால் பணத்தை எடுத்த இளைஞர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். மீண்டும் 2000 ரூபாய் பணம் எடுக்க ஏடிஎம் கார்டை சொருகியுள்ளார். அப்போதும் 2000 பணம் வந்துள்ளது. அந்த இளைஞர் சந்தோஷப்பட்டாலும், நேர்மையாக நடந்து கொண்டார். உடனே ஷெட்டரை இழுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். ஏன் அப்படி பணம் வந்தது என்பதை பார்ப்போம்.
பொதுவாக ஏடிஎம்களில் பணத்தை எடுக்க போகும் போது, மிக அபூர்வமாக கூடுதலாக பணம் வரும். அதாவது 500 கேட்டால் ஆயிரம் வரும். 1000 கேட்டால் 2000 வரும்.. 2000 எடுத்தால் 5000 வரும்.. இப்படியான சிக்கல்களுக்கு ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்படும் கோளாறு காரணம் அல்ல.. மனிததவறுதான் காரணம் ஆகும்.
அதாவது 200 ரூபாய் நோட்டு வைக்க வேண்டிய இடத்தில் 500 வைத்தால், இயந்திரம் பணத்தை மாற்றிக்கொடுக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் யாராவது பணத்தை எடுக்க முயற்சி செய்து பின் எல்லாம் அடித்துவிட்டு, பணத்தை எடுக்காமல் போயிருப்பார்கள்.. அப்படியான சூழலில் பணம் அதிகமாக வரும். பொன்னேரியில் ஏடிஎம் இயந்திரத்தில் நடந்த கோளாறு என்ன என்பதை பார்ப்போம்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி முத்துமாரியம்மன் கோவில் அருகே திருவொற்றியூர் சாலையில் தனியார் ஏ.டி.எம். மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பொன்னேரி அடுத்த வேன்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் ஏ.டி.எம்.மில் ரூ.2 ஆயிரம் பணம் எடுக்க வந்துள்ளது. அவர் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.5 ஆயிரம் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மீண்டும் ரூ.2 ஆயிரம் எடுக்க ஏடிஎம் கார்டை சொறுகிறார். அப்போதும் 2 ஆயிரத்திற்கு பதில் ரூ.5 ஆயிரம் வந்தது. உடனடியாக அவர் பொன்னேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அங்கு வந்த போலீசார் ஏ.டி.எம். ஷட்டரை மூடி பூட்டு போட்டனர். பொன்னேரி போலீசார் நடத்திய விசாரணையில் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.200 வைக்க வேண்டிய பகுதியில் ரூ.500-ஐ மாத்தி வைத்ததால் குளறுபடி ஏற்பட்டது தெரிய வந்தது. அதேநேரம் குளறுபடியான இந்த ஏ.டி.எம்.மில் இருந்து வாடிக்கையாளர்கள் சுமார் ரூ.2 லட்சம் வரை எடுத்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தனியார் வங்கி ஊழியர்கள் யார்? யார்? எவ்வளவு எடுத்து சென்றுள்ளனர் என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பொன்னேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கடந்த வாரம் தேனி மாவட்டம் பெரிய குளத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வைகை அணை சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் எந்திரத்தில் கடந்த வாரம் பண மழை பொழிந்துள்ளது. ஏடிஎம் எந்திரத்தில் 500 ரூபாய் நோட்டுகள் தானாக வெளியேறியதை பார்த்த இளைஞர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் அந்த பணத்தை எடுத்த இளைஞர்கள் , நேர்மையாக ஒப்படைத்தனர். தானாக வெளியேறிய பணத்தை நேர்மையாக ஒப்படைத்த இளைஞர்களை போலீசார் பாராட்டினார்கள்.
Weather Data Source: Wettervorhersage 21 tage