டெல்லி: லோக்சபாவில் இன்று அரசியலமைப்பு குறித்த விவாதம் நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. இதை சுட்டிக்காட்டிய அகிலேஷ் யாதவ், ‛அரசியலமைப்பு பற்றிய விவாதம் நடக்கும்போது பிரதமர் மோடி எங்கே சென்றார்? அவர் இன்றி அரசியலமைப்பு பற்றி விவாதம் நடத்த எப்படி முடியும்?'' என கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இன்று அரசியலமைப்பு குறித்த விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 26 ம் தேதி அரசியலமைப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது நம் நாட்டின் அரசியலமைப்பு அமலுக்கு வந்து 75 ஆண்டு ஆனதை பெருமைப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் இன்று அரசியலமைப்பு தின சிறப்பு விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மத்தியில் ஆளும் பாஜக அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றுவது இல்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்து நாடாளுமன்றத்தில் பதவியேற்றனர். இதனால் இன்றைய விவாதம் என்பது அதிக முக்கியத்துவம் பெற்றது.
இந்நிலையில் தான் லோக்சபாவில் இன்று அரசியலமைப்பு தொடர்பான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கினார். அப்போது காங்கிரஸ் கட்சி மீது அவர் சரமாரியாக குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பின் கொள்கைகளை சிதைப்பதாக குற்றம்சாட்டினார்.
இந்த வேளையில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த கனுஜ் எம்பி அகிலஷ் யாதவ் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அப்போது, ‛‛பாஜக பிரச்சனையை எதிர்கொண்டு வரும் மக்களை அந்நியப்படுத்தி வருகிறது. மத்திய பாஜக ஆட்சியில் பிறநாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு குடியுரிமை என்பது வழங்கப்படுவது இல்லை.
உத்தர பிரதேச இடைத்தேர்தலில் போலீஸ்காரர் துப்பாக்கி காட்டி பெண்களை மிரட்டி ஓட்டளிக்க விடாமல் செய்கிறார். அதேவேளையில் போலீசுக்கு பயந்து பெண்கள் ஓட்டளித்து இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். பிரதமர் இன்றி அரசியலமைப்பு பற்றி விவாதிப்பது எப்படி இருக்கும்?'' என்று பதிலடி கொடுத்தார். இந்த விவாதத்தின்போது பிரதமர் மோடி சபையில் இல்லாததால் அகிலேஷ் யாதவ் இந்த கேள்வியை எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.