சென்னை: பொது இடங்களுக்கு வருவதை ஏன் விஜய் தவிர்க்கிறார்? என்பது பற்றிய விவாதம் தற்போது சமூக ஊடகங்களில் பேசு பொருளாக உருவெடுத்துள்ளது.
விஜய் தன் பனையூர் வீட்டுக்கு அழைத்து நிவாரணம் அளித்ததை சிலர் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாகச் சொன்னால், அவரை உடன்பிறப்புகள் அதிகமாக சமூக வலைத்தளத்தில் விமர்சிப்பதைப் பார்க்க முடிகிறது. பாதிக்கப்பட்ட மக்களைத் தேடிச் சென்று உதவுவதுதான் சரியான அணுகுமுறை என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். மக்களைத் தேடிச் சென்று உதவ வேண்டும் என்ற வாதத்தில் பொருள் இல்லாமல் இல்லை. அப்படித்தான் செய்யவேண்டும் என்பதை விஜய் அறியாதவரும் இல்லை.
ஆனால், அதை மீறி அவர் பனையூருக்கு அழைத்து நிவாரணப் பொருட்களை அளித்துள்ளார். அதுவும் தூத்துக்குடி வெள்ளத்தின் போது தாமதமாகப் போய் உதவி செய்ததைப் போல் இல்லாமல் இம்முறை உடனடியாக செய்துள்ளார். அந்தளவில் அவரது செயல் சிறப்பானது.
ஏதோ அரசியலிலிருந்து பல ஆண்டுகள் பதவிகளை அனுபவித்த பிறகு அவர் செய்யவில்லை. சொந்த பணத்தைச் செலவு செய்து உதவி இருக்கிறார். கிட்டத்தட்ட 300 குடும்பங்கள் என்கிறார்கள். அரிசி, சர்க்கரை, ரவா உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கி இருக்கிறார். ஆனால், அந்த நிவாரணத்தைப் பெற்றுக் கொண்டு வந்த மக்கள் சிலர் 'நாங்கள் இந்த உதவிக்காக வரவில்லை. அவரை நேரில் பார்க்க முடியுமே என்பதற்காக வந்தோம்' என்று பேசி இருக்கிறார்கள்.
வேறுசிலர் அவரை பார்க்கவேண்டும் என்பது பல நாள் ஆசை. அதற்காகவே வந்தேன் என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதைத்தாண்டி அவர் ஆட்சிக்கு வரவேண்டும். அவருக்குத்தான் ஓட்டு. அவர்தான் அடுத்த முதல்வர் என அவரை நேரில் பார்த்த மயக்கத்தில் ஏதேதோ பேசி இருக்கிறார்கள். வீட்டுக்கு வரவழைத்து பேசிய விஜய், 'உங்களிடம் பொறுமையாக உட்கார்ந்து பேச முடியும். ஆனால், உங்கள் பகுதிக்கு வந்தால் அது முடியாது' என்று கூறியுள்ளார்.
அவர் சொன்ன காரணம் நியாயமானது எனச் சிலர் சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் புதுச்சேரியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பல ஆண்டுகள் முன்னதாக விஜய் நேரில் கலந்து கொண்டது ஏன்? அதேபோல் அவர் வேறு சிலர் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எல்லாம் மக்கள் கூட்டம் கூடவில்லையா என்ன? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
அதேநேரம் அவர் கல்வித்திட்ட உதவிகள் வழங்குவதற்காக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். அதில் ஒரு ஆசிரியர் விஜய்யைப் பாடிப் புகழ்ந்த காட்சியைப் பலரும் விமர்சித்தனர். ஒரு பெண்மணி விஜய்யைக் கையை பிடித்துப் பிடித்து இழுத்தார். தூத்துக்குடி வெள்ள நிவாரணத்தில் உதவி பெற வந்த மக்கள் அவர் அளித்த பொருட்களைவிட அவரை ஒரு காட்சிப் பொருளாகவே பார்த்துத் திரும்பி இருந்தனர். அந்தளவுக்கு அவரைப் பார்க்க ஒரு ஆர்வம் இருக்கிறது. சிலர் அந்த ஆர்வக்கோளாறு காரணமாக சில காமெடி காட்சிகளை அரங்கேற்றிவிடுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கான உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்களைவிடப் பெற்றோர்கள் அவரிடம் வழிந்து நின்றதுதான் காமெடி. அதை விஜய் ரசிக்கவும் இல்லை. ஒருசிலர் அவரை கன்னத்தைக் கிள்ளி முத்தம் தரும் காட்சியும் வெளியானது.
இதைப் போன்று மக்கள் நடந்து கொண்டால், விஜய் என்ன செய்ய முடியும்? அதை உணர்ந்துதான் அவர் பொது இடங்களில் வரவே அஞ்சுகிறார். சரி, ஒருநடிகராக அவர் இருந்தவரை அப்படியான அணுகுமுறை சரியானதுதான். அவர் பொது வாழ்வுக்கு வந்த பிறகும் வீட்டுக்குள்ளாகவே முடங்கி அறிக்கை அரசியல் செய்வது சரியா என்று கேள்வி எழுகிறது.
ஒரு கட்சியின் தலைவராக அவர் மழை வெள்ளம் பற்றி அறிக்கைதான் கொடுக்கிறார். ஆனால், அவர் என்ன செய்ய வேண்டும்? எது நடந்தாலும் பரவாயில்லை என்று களத்தில் போய் மக்களுடன் மக்களாக நிற்கவேண்டும். ஊடகங்களைப் பார்த்து தன் கேள்விகளை முன்வைக்க வேண்டும். அப்படி விஜய் செய்வது இல்லையே?
எம்.ஜி.ஆருக்கு இல்லாத புகழா? இப்போதும் கூட எம்.ஜி.ஆர் புகைப்படத்தைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் மக்கள் இருக்கிறார்கள். அவரை தெய்வமாக நம்பும் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர் முதல்வராகவும் சினிமா புகழோடு வலம் வந்த காலத்தில் பொது இடங்களுக்குச் சென்றுள்ளார். ஒருமுறை முதல்வராக இருந்த போதே கோட்டைக்குச் செல்லும் கடற்கரைச் சாலையில் நிதி தரவில்லை என மத்திய அரசைக் கண்டித்து சாலையில் உட்கார்ந்து தர்ணா நடத்தினார். அப்படி முன்மாதிரியாக ஒரு மக்கள் செல்வாக்கு மிக்க ஒருவர் மக்களுடன் மக்களாகக் களத்தில் நின்றிருக்கிறார்.
அதனால்தான் அவரை மக்கள் பெரிய அளவில் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், விஜய் வீட்டுச் சன்னல் வழியாகவே அனைத்து சம்பவங்களையும் பார்த்து அறிக்கை விடுவது எப்படிச் சரியாகும் என்பது முக்கியமான கேள்வியாக எழுகிறது. அவர் மக்களை விட்டு விலக விலகத்தான் கிரேஸ் அதிகமாகும். அது சினிமா வாழ்க்கைக்கு அதிகமாகக் கைகொடுக்கும். ஆனால், மக்கள் அரசியல் என்பது அப்படியல்ல. துயரத்தின் போது போய் அவர்களின் கையைப் பற்றிக் கொண்டு நிற்பது. அவர்களின் கதையைக் கேட்பது. அதை ஏன் விஜய் செய்யத் தவறுகிறார்?
மக்களையும் சந்திக்க மாட்டார். ஊடகங்களையும் சந்திக்க மாட்டார். ஆனால், அடுத்து நம்ம ஆட்சி வரும். எல்லாம் மாறிவிடும் என்று விஜய் வாக்குறுதி அளித்ததாக பனையூரில் நிவாரணப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு வந்தவர்கள் வாக்குமூலம் அளிக்கிறார்கள். அவ்வளவு எளிமையான பதவியா முதல்வர் நாற்காலி?
அவர் வெறும் அறிக்கையால் அரசியல் நடத்திக் கொண்டிருந்தால், அவர் எந்தளவுக்கு அரசியல் புரிதலுடன் இருக்கிறார் என்பதைக் கணிக்கவே முடியாது. மக்கள் ஒரு தடுமாற்றத்தில் இருப்பார்கள். எனவே சினிமாவில் தனக்குப் பிரச்சினை வந்த போது எல்லாம் மவுனமாக இருந்ததைப் போல் அரசியலிலும் அறிக்கை மூலமே கட்சியை நடத்தி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என நம்பினால், அது நிச்சயம் கைகொடுக்காது.
விஜயகாந்த் எந்தளவுக்கு ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை எதிர்த்தாரோ அந்தளவுக்கு மக்கள் அவரை வரவேற்றனர். அவர் பேச்சைப் பலரும் நம்பினர். பின்னால் அவர் உளறத் தொடங்கிய பின்னர்தான் மக்கள் அவரை விட்டு விலகினர். விஜய் எப்போது விஜயகாந்த் போல் பொது மேடைகளில் சீறுவார் என்பதைப் பொறுத்தே அவர் எதிர்காலம் சிறப்பாகும். அப்படி இல்லை எனில் சொல்வதைப் போல் Work from home அரசியல்வாதியாகிவிடுவார் என சமூக ஊடகங்களில் சிலர் எச்சரித்து வருகின்றனர்.
Weather Data Source: Wettervorhersage 21 tage