பெங்களூர்: கன்னடர்கள் வியர்வை சிந்தி உழைத்து செலுத்தும் வரியை வட இந்திய மாநிலங்கள் அபகரித்து செல்வதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஆவேசமாக கூறியுள்ளார்.
மத்திய இடைக்கால பட்ஜெட் கடந்த 1-ந் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பது அதிருப்தி.
மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த கர்நாடகா காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ், தென்னிந்திய மாநிலங்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தி மொழி பேசும் மாநிலங்களில் இருந்து தென்னிந்திய மாநிலங்கள் தனிநாடு கேட்கும் நிலைமை உருவாக்கப்படுகிறது என விமர்சித்திருந்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதேபோல கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமாரும், இந்தி பெல்ட் மாநிலங்கள்தான் இந்தியாவா? தென்னிந்திய மாநிலங்களுக்கு ஏன் பெரிய திட்டங்கள் எதுவுமே இல்லை என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். நாடாளுமன்றத்திலும் இந்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே #SouthTaxMovement என்ற பெயரில் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் பதிவிடப்பட்டு மத்திய அரசு கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகிறது. இந்த #SouthTaxMovement-க்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கன்னடர்கள் வியர்வை சிந்தி உழைத்து செலுத்தும் வரியானது வட மாநிலங்களுக்கு போகிறது. வட இந்திய மாநிலங்கள் நமக்கு முன் மாதிரியானவை அல்ல. உழைக்கின்ற கன்னடர்களுக்கு போதுமான சாப்பாடு கொடுக்காத நிலைமைதான் வரி பகிர்வில் இருந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
#SouthTaxMovement என்ற ஹேஷ்டேக்கில் கர்நாடகா, மத்திய அரசுக்கு எவ்வளவு வரி செலுத்துகிறது; மத்திய அரசு எவ்வளவு வரி பகிர்வு தருகிறது என்பது உள்ளிட்ட விவரங்கள் பதிவிடப்பட்டுள்ளன. மேலும் இந்தி திணிப்புக்கு எதிராகவும் இந்த ஹேஷ்டேக்கில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அதேபோல தென்னிந்திய மாநிலங்கள் தனிநாடு கோரும் நிலைமை உருவாகும் என்ற காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் கருத்துக்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.