சென்னை: சிவப்பு காது ஆமைகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த ஆமைகளை யார் வைத்திருந்தாலும் காவல்துறை உடனடியாக கைது செய்துவிடும்.. காரணம், இந்தியாவில் இதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. இப்போது சென்னையில் ஒரு கும்பல் சிக்கியிருக்கிறது.
சிவப்பு காது ஆமைகள் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டவை... இதன் நிறமும், சிறிய தோற்றமும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்திழுக்கக்கூடியது. பெரிய பங்களாக்களின் அலங்கார தொட்டிகளில் வைத்து வளர்க்கிறார்கள். மேலும், மருத்துவ குணங்கள் இந்த ஆமையில் இருப்பதால் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், இந்த வகை ஆமைகள், நம்முடைய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு உகந்தது கிடையாது.. இவற்றால் இந்தியைவைப் வாழ்விடமாகக் கொண்ட உயிர்களுக்கு நிறைய பாதிப்பு ஏற்படக்கூடும்.. அதிலும், இந்தியாவை வாழ்விடமாகக் கொண்ட ஆமைகளுக்கு, இந்த சிவப்பு காது ஆமைகளால் அதிக ஆபத்து வந்துவிடும்.
இனப்பெருக்கம்: பார்ப்பதற்கு சின்னதாக இருந்தாலும், வேகமாக வளரும். இனப்பெருக்கமும் அதிகம்.. அதிக முரட்டுத்தனம் கொண்டவை. அதனால், இந்திய ஆமைகளின் இனப்பெருக்க சூழ்நிலை, உணவு போன்றவற்றை இந்த ஆமைகள் அபகரித்து கொள்ளுமாம். மேலும், இந்த ஆமைகளால், நம்முடைய விலங்குகள், பறவைகள், மனிதர்களில் பலர் வெளிநாட்டு நோய்க் கிருமிகளால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.. நீர்நிலைகள் பாதித்து, சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும்.
அதனால்தான், இந்த ஆமைகள் இந்தியாவிற்குள் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில செல்லப்பிராணி பிரியர்கள் இந்த வகை ஆமைகளை, சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள். ஒருகட்டத்தில் அதனை வளர்க்க முடியாமல், எங்காவது இயற்கை நீர் நிலைகளில் விட்டு சென்றுவிடுகிறார்கள்.
சரணாலயம்: இதனை கண்டறிபவர்கள் அங்கிருக்கும் வன உயிரின சரணாலயத்தில் அவற்றை ஒப்படைக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இப்படி வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சிவப்பு காது ஆமைகள் வண்டலூர் பூங்காவில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. இப்போது சென்னை விமானத்தில் ஒருவர் சிக்கியிருக்கிறார்.
மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, மீனம்பாக்கம் ஏர்போர்ட்டுக்கு ஒரு தனியார் ஏர்லைன்ஸ் விமானம் வந்திறங்கியது. இதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல பரிசோதித்து, சந்தேக பயணிகளின் உடைமைகளை முழுமையாக சோதனை நடத்தினார்கள்..
2 பேர் சிக்கினார்கள்: அப்போது சென்னையை சேர்ந்த ரமேஷ் ஆகாஷ் (29), தமிம் அன்சாரி முகமது ரபீக் என்ற 2 பேரும் மலேசியாவுக்கு சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்திருந்தனர். அவர்களின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்களது உடைமைகளையும் சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த அட்டைப் பெட்டியில், ஏராளமான சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் உயிருடன் நடமாடுவதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுமார் ரூ.75 லட்சம் மதிப்பிலான 5400 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகளை, இருவரும் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.. பிறகு, மத்திய வனத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டு, அவர்களும் விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
விசாரணை: இறுதியாக, 5400 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகளை மறுபடியும், அதே விமானத்தில் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பவும், இதற்கான செலவுகளை அந்த 2 கடத்தல் பயணிகளிடமே வசூலிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்து, அதன்படி, அவர்கள் வந்த விமானத்திலேயே 5400 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகளும் திருப்பி அனுப்பப்பட்டன. கடத்தி வந்த 2 பயணிகளையும் கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
Weather Data Source: Wettervorhersage 21 tage