தலை துண்டானது.. சென்னை பைக் விபத்தில் 2 ஐடி ஊழியர் பலி.. 20 அடி உயரத்துக்கு தூக்கிவீசப்பட்ட கொடூரம்

post-img
சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் பைக் மோதியது. இதில் பைக்கில் இருந்து 20 அடி உயரம் பறந்து சென்று கீழே விழுந்து 2 பேர் பலியாகினர். அதில் ஒருவரின் தலை துண்டானது. சென்னை பம்மல் பகுதியை சேர்ந்தவர் கோகுல்( வயது 24). இவர் பெருங்குடியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த ஐடி நிறுவனத்தில் கேரளாவை சேர்ந்த விஷ்ணு (24) என்பவரும் பணியாற்றி வருகிறார். விஷ்ணு, கேரளாவை சேர்ந்தவர் என்பதால் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள நாகலட்சுமி தெருவில் உள்ள வீட்டில் வசித்தபடி பணிக்கு சென்று வந்தார். அதேபோல் பள்ளிக்கரணை ராஜலட்சுமி நகர் 6வது தெருவில் வசித்து வருபவர் கன்னியாகுமரியை சேர்ந்த அஜேஷ். இவரும் அதே ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருவதால் கோகுல், விஷ்ணு, அஜேஷ் ஆகியோர் நண்பர்களாகினர். நேற்று அஜேஷ் சொந்த ஊருக்கு புறப்பட்டார். இதையடுத்து பள்ளிக்கரணை ராஜலட்சுமி நகரில் உள்ள அஜேஷின் அறையில் நேற்று இரவு விஷ்ணு, கோகுல், கிஷோர் உள்பட மேலும் சிலர் சேர்ந்து பார்ட்டி கொண்டாடினர். மதுபானம் குடித்து ஆட்டம் போட்டுள்ளனர். மதுபானம் காலியானது. இதனால் அதிகாலை 4 மணிக்கு விஷ்ணுவும், கோகுலும் பைக்கில் பல்லாவரம்-துரைபாக்கம் 200 அடி ரேடியல் சாலை சென்று தனியார் மதுபான விடுதியில் மதுபானம் வாங்கினர். அதன்பிறகு மீண்டும் இருவரும் பைக்கில் ராஜலட்சுமி நகருக்கு சென்று கொண்டிருந்தனர். பள்ளிகரணை சிவன் கோவில் அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது. மோட்டார் சைக்கிள் மோதிய வேகத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கோகுல் 20 அடி உயரம் பறந்து சென்று மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்தார். இதில் அவரது தலை துண்டானது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அதேபோல் தூக்கி வீசப்பட்ட விஷ்ணுவின் நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவரும் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி அறிந்தவுடன் பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Related Post