மகனுக்கு துரோகம்! மருமகளின் கள்ளக்காதலை தட்டி கேட்ட மாமியார் அடித்துக் கொலை! செங்கல்பட்டில் ஷாக்

post-img
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மருமகளின் கள்ளக்காதலை கண்டித்த மாமியாரை கழுத்தை நெரித்து கொன்று அதை தற்கொலை என நாடகமாடிய மருமகள், கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த நெரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (42). இவரது மனைவி அமுல் (38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜசேகரின் தாய் லட்சுமி (58) தனது மகன், மருமகளுடன் வசித்து வந்தார். ராஜசேகருக்கு நெல் அறுவடை இயந்திரம் இருக்கிறது. இதை வைத்து பல்வேறு ஊர்களுக்கு சென்று அங்கு தங்கியிருந்து நெல் அறுவடை செய்யும் பணியை செய்துவிட்டு வருவார். அது போல் வெளிமாநிலங்களுக்கு சென்றும் அவர் வேலை பார்த்து வந்தார். இதனால் மாதத்தில் பெரும்பாலான நாட்களில் ராஜசேகர் வீட்டில் இருக்க மாட்டார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் ராஜசேகரின் நண்பர். கணவரின் நண்பர் என்ற முறையில் அவ்வப்போது இவருடன் அமுல் பேசி வந்துள்ளார். நாளடைவில் இந்த பேச்சுவார்த்தை கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் சேர்ந்து தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்த வந்தனர். இந்த விவகாரம் மாமியார் லட்சுமிக்கு தெரியவந்ததை அடுத்து அவர் அதிர்ச்சி அடைந்தார். "நம் மகன் குடும்பத்தை காப்பாற்ற ஊர் ஊராக சென்று வேலை செய்து வருகிறான். ஆனால் மருமகளோ அவனுக்கு துரோகம் செய்கிறாளே, இந்த விஷயத்தை மகனுக்கு சொல்லாமலேயே எப்படியாவது சரி செய்து விடலாம்" என லட்சுமி நினைத்து, தனது மருமகளுக்கு அறிவுரை கூறியதாக தெரிகிறது. ஆனால் கள்ளக்காதல் மயக்கத்தில் இருக்கும் அமுலுவுக்கு மாமியார் வாயை திறந்தாலே எரிச்சலாக இருந்தது. இதனால் அவருடன் எப்போதும் தகராறில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று லட்சுமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மருமகள் அமுலு தெரிவித்துள்ளார். இதையடுத்து தகவலறிந்த போலீஸார் லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது லட்சுமியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அதன் பிறகு தூக்கில் மாட்டப்பட்டுள்ளார் என்றும் உடலில் நிறைய காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் உடனே அக்கம்பக்கத்தில் விசாரித்த போதுதான் அமுலுக்கும் சரவணனுக்கும் இருக்கும் கள்ளக்காதல் குறித்து தெரிவித்தனர். உடனே போலீஸார் அவர்களை விசாரிக்க முயன்ற போது அவர்களாகவே கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தனர். சம்பவத்தன்று தனது மாமியாருக்கும் தனக்கும் மீண்டும் சண்டை வந்ததாகவும் தனது தோழி பாரதியுடன் சேர்ந்து தானும் சரவணனும் மாமியாரை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.

Related Post