சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர் நல்லக்கண்ணு இன்று நூறாவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். நம் தலைமுறைக்கான நேர்மையான அரசியல் பாதையாகவும் பாடமாகவும் திகழ்பவர் நல்லகண்ணு என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி நடிகர் விஜய் தொடங்கியிருந்தார். இவருடைய கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோருக்கு மரியாதை செலுத்தியும் அவர்கள் சார்ந்து அறிக்கைகள் விடுவதாலும் விஜய்யின் அரசியல் பலராலும் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.
விமர்சனம்: அதேசமயம், முக்கிய தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களில், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திலேயே, மலர்தூவி மரியாதை செலுத்தி வருகிறார். இதையடுத்து, அறைக்குள்ளேயே அரசியல் நடத்தினால் போதுமா? "work from home மோட்"டிலேயே விஜய் அரசியல் செய்வதாக பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில், மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100வது பிறந்த நாளையொட்டி, விஜய் தன்னுடைய மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்களை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சோதனை: 4 வருடங்களுக்கு முன்பு, விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது, தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை தந்திருந்தது.. அப்போது, விஜய்யை பழிவாங்கும் நடவடிக்கை இது என்று, நல்லகண்ணு கூறியிருந்தார்.
விஜய் ஷூட்டிங்கில் இருப்பது தெரிந்தும், அதை நிறுத்திவிட்டு சோதனை நடத்த வேண்டியதற்கான அவசியம் என்ன? மத்திய அரசுக்கு எதிராக யார் கருத்து கூறினாலும் அவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சரியல்ல. விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையை பழிவாங்கும் நடவடிக்கையாகும். விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியது தேவையற்ற ஒன்று" என்றெல்லாம் நல்லகண்ணு விஜய்க்காக ஆதரவு தந்து பேசியிருந்தார்.
சிந்தனை வளம்: இந்நிலையில், நல்லகண்ணுவுக்கு, மிக நீண்ட, நெடிய வாழ்த்து செய்தியை விஜய் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தன்னுடைய பக்கத்தில், அய்யாவின் உடல்நலம், மனநலம், சிந்தனை வளம் நீடித்து நிலைக்க இறைவனை வேண்டுவதாக நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.
விஜய் தன் வாழ்த்தில், "அரசியலைத் தங்கள் அடையாளமாக ஆக்கிக் கொண்டவர்கள் மத்தியில், அரசியலுக்கே ஒரு தனித்த பெரும் அடையாளமாகத் திகழ்பவர், மரியாதைக்குரிய திரு.நல்லக்கண்ணு அய்யா. சுதந்திரப் போராட்டக் களத்தில் நின்றவர். பிறகு பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். சிறைக் கொட்டடிகளைச் சிரித்துக்கொண்டே சிநேகித்தவர். தடைகளைத் தகர்த்த தனிப்பெரும் தளகர்த்தர்.
அடையாளம்: சாதிய வன்மத்திற்கு எதிராகக் களமாடியவர் மட்டுமன்று. வாழ்ந்து காட்டியவர். சமூக நீதியை, சமத்துவத்தை நிலைநாட்டியவர். தன் வாழ்நாள் முழுமைக்கும் அதை வாழ்ந்து காட்டியே நிரூபித்துக் கொண்டிருப்பவர். தமிழகத்தின் தனிப்பெரும் சமூக, அரசியல் அடையாளமாக உயர்ந்து நிற்பவர்.
தங்களுக்கான நிதியை மட்டுமே திரட்டும் அரசியலாளர்கள் இடையே, தனக்குக் கிடைத்த நிதி அனைத்தையும் தான் சார்ந்த இயக்கத்திற்கும் விவசாயிகளுக்கும் அரசுக்கும் கொடுத்த உத்தமர்.
நேர்மை: தலைவனாக வருவது முக்கியமன்று. தலைவனாக வாழ்ந்து காட்டுவதே முக்கியம் என்ற இலக்கணத்திற்கு இன்றுவரை ஒற்றை உதாரணம், நேர்மையின் ஊற்றுக்கண்ணான திரு.நல்லக்கண்ணு அய்யா மட்டுமே. அவரே, நம் தலைமுறைக்கான நேர்மையான அரசியல் பாதையாகவும் பாடமாகவும் திகழ்பவர். நூற்றாண்டு காணும் அவரைப் போற்றிப் புகழ்ந்து வணங்குவோம். அய்யாவின் உடல்நலம், மனநலம், சிந்தனை வளம் நீடித்து நிலைக்க இறைவனை வேண்டுகிறேன்" என்று விஜய் பதிவிட்டுள்ளார்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.