டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்றைய தினம் உடல்நலக்குறைவால் காலமானார். மன்மோகன் சிங் எப்போதும் நீல நிற தலைப்பாகை அணிந்தே நாம் பார்த்து இருப்போம். சீக்கியர்கள் தலைப்பாகை அணிய வேண்டும் என்றாலும் மன்மோகன் சிங் எப்போதும் நீல நிறத்திலேயே தலைப்பாகை அணிந்திருந்தார். அதற்கான காரணத்தை முன்பு அவரே ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இருந்தார். அது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். சர்வதேச பொருளாதார வல்லுநராக அறியப்படும் மன்மோகன் சிங், இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கி ஆளுநர் எனப் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
இந்தியா மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவித்த போது, நரசிம்மராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது 1991ம் ஆண்டு அவர் தாராளமயமாக்கலைக் கொண்டு வந்தார். இந்திய பொருளாதாரத்தை மொத்தமாக மாற்றிப்போட்ட கொள்கை அதுதான். அப்போது ஆரம்பித்த இந்தியாவின் வளர்ச்சி இன்னும் சிறப்பாகவே இருக்கிறது. அன்று மட்டும் மன்மோகன் சிங்க அந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் நமது பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்று இருக்கும்.
இதற்கிடையே மன்மோகன் சிங்கின் தலைப்பாகை குறித்த ஒரு தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. அதாவது நாம் யோசித்துப் பார்த்தால் அவர் எப்போதும் நீல நிறத்திலேயே தலைப்பாகை அணிந்துள்ளார். பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்ட போது, எப்போதும் நீல நிற தலைப்பாகையே அவர் அணிந்து கலந்து கொண்டு இருக்கிறார். சீக்கியர்கள் தலைப்பாகை அணிய வேண்டும் என்பது விதி என்றாலும் ஏன் அவர் நீல நிற தலைப்பாகையை மட்டும் அணிந்தார் என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம்.
இதற்கான பதிலை மன்மோகன் சிங்கே கடந்த 2013ம் ஆண்டு அளித்திருந்தார். அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஏன் எப்போதும் நீல நிறத் தலைப்பாகையைத் தேர்வு செய்கிறார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த மன்மோகன் சிங், "இது கேம்பிரிட்ஜின் நிறம்.. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நான் படித்த நாட்கள் அழகானவை. அவை எனது நினைவுகள் எப்போதும் ஆழமாகப் பதிந்து இருக்கும். லைட் நீல நிறம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதன் காரணமாகவே எப்போதும் என் தலைப்பாகை அந்த நிறத்தில் இருக்கும்" என்று குறிப்பிட்டார்.
அதாவது நீல நிறம் என்பது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ நிறமாகும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ நிறமான நீல நிறம் என்பது அவருக்கும் பிடித்த ஒரு கலராக இருப்பதாலேயே அவர் எப்போதும் அதே நிறத்தில் டர்பன் அணிந்து இருக்கிறார்.
1952ம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொருளாதாரம் படித்த அவர், பிறகு 1954ம் ஆண்டில் ஹோஷியார்பூரில் முதுகலை பிரிவில் பொருளாதாரம் பயின்றார். தொடர்ந்து 1957ம் ஆண்டு பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் மேற்படிப்பு படித்தார்.
மன்மோகன் சிங் தனது வாழ்க்கையில் கல்விக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்தவராக இருந்துள்ளார். படித்து முடித்த பிறகு அவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவே தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும், முன்னாள் பிரதமராக இருந்த போதும் 2016ல் அவர் பேராசிரியராகவே தொடர்ந்து பணியாற்றினார்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.