சென்னை: தமிழக அரசியலில் 2024 குறிப்பிடத்தக்க பல மாற்றங்களை தந்திருக்கிறது. அந்த வகையில் திமுகவின் ’அடுத்த வாரிசாக’ களம் இறங்கி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். ஒரே ஆட்சி காலத்தில் எம்எல்ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர் என அரசியலில் தனது உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறார். 2024ல் உதயநிதி ஸ்டாலின் சாதித்ததும் சறுக்கியதும் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்..
தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமாகி, நாயகனாக உயர்ந்து, பின்னர் திமுக இளைஞர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின், 2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவர் அமைச்சராக பதவியேற்பார் என கூறப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போது அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பதே பேசுபொருளாக இருந்தது.
உதயநிதி ஸ்டாலின்:
ஒரு வழியாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் உதயநிதி நில மாதங்களுக்கு பிறகு நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையே கடந்த செப்டம்பர் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா சென்ற நிலையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பதவி உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது. தொடர்ந்து பல மாதங்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக எப்போது பதவி ஏற்பார் என்ற விவாதங்கள் எழுந்தது.
துணை முதலமைச்சர்:
இது தொடர்பாக திமுக அமைச்சர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். இதற்கு நேரடியாகவே பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், எதுவாக இருந்தாலும் முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார் எனக் கூறியிருந்தார். இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று வந்த நிலையில், செப்டம்பர் 28ஆம் தேதி இரவு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். ஏற்கனவே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையை கவனித்து வந்த அவருக்கு கூடுதலாக திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு முதல்வராகவும் பொறுப்பு வழங்கப்பட்டது.
சீனியர்கள் ஆதரவு:
அன்றிலிருந்து உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக மட்டுமல்ல கட்சியின் தலைவருக்கு ஈடாகவே பணியாற்றி வருகிறார் என்று கூறலாம். சீனியர்களின் எதிர்ப்பு சிறிதும் இன்றி ஜூனியர்களின் பெரும் வரவேற்போடு கட்சியிலும் ஆட்சியிலும் பணியாற்றி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அரசியலில் ஜூனியர் ஆக இருந்தாலும் ஆட்சியில் சீனியர்களை மிஞ்சி செயல்பட்டு வருகிறார் என்கின்றனர் அவரது கட்சியினர்.
உழைப்புக்கு பாராட்டு:
குறிப்பாக சென்னை வெள்ளம் பாதிப்பு காலத்தில் இரவு பகல் பாராது உதயநிதி ஸ்டாலின் பணியாற்றியது பலரையும் கவர்ந்தது. மேலும் சென்னையில் கார் ரேஸ், செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஹாக்கி தொடர் உள்ளிட்ட பல தொடர்களை நடத்தி தனது துறையில் முத்திரை பதித்தார். மேலும் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அரசு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வந்தார். செல்லும் இடமெல்லாம் திமுகவினர் திரண்டு வந்து உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
ஜூனியர்கள் உற்சாகம்:
அது மட்டும் அல்லாமல் உதயநிதி ஸ்டாலின் நட்பு கிடைத்தால் அடுத்ததாக கட்சியிலும் ஆட்சியிலும் உயர் பொறுப்பு கிடைக்கும் என ஜூனியர்கள் மட்டுமல்லாது சீனியர்களும் தவம் கிடக்கின்றனர். முதல்வருக்கு அடுத்தபடியாக உதயநிதி செல்லும் இடமெல்லாம் நேரலை செய்தன ஊடகங்கள். திமுக ஐடி விங் மட்டுமல்லாது தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறையும் உதயநிதி குறித்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இப்படியாக உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணம் 2024 எழுச்சி பெற்றது என்றே கூறலாம்.
திராவிடத்தின் இளவரசர்:
திராவிடத்தின் இளவரசர் என கொண்டாடுகின்றனர் திமுக உடன் பிறப்புகள். அதே நேரத்தில் உதயநிதிக்கு பல விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் எழுந்திருக்கிறது. வாரிசு அரசியல், அரசியலில் போதிய அனுபவமின்மை, போன்ற விமர்சனங்கள் அவரை நோக்கி முன்வைக்கப்பட்டாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் அவ்வப்போது கோபப்படுவதும் உதயநிதிக்கு சற்று பின்னடைவு. மேலும் எதிராளிகளை ஒருமையில் பேசுவது போன்ற சில சறுக்கல்களையும் அவர் எதிர்கொண்டு இருக்கிறார். அதையெல்லாம் சரி செய்து விட்டால் எதிர்காலத்தில் திமுகவின் உறுதியான தலைவராக எவ்வித எதிர்ப்புமின்றி தலையெடுக்க வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.