எச்சரிக்கை: இக்கட்டுரையில் பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரணைகள் உள்ளன. சில விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.
பிரான்ஸில் தன் முன்னாள் கணவர் உட்பட 51 ஆண்களால் கிசெல் பெலிகாட் எனும் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், அவருடைய முன்னாள் கணவர் டொமினிக் பெலிகாட் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
தன் மனைவிக்கு டொமினிக் தூக்க மருந்து அளித்து, பல ஆண்களை வைத்து அவரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதாக அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தன் மகள் மற்றும் இரு மருமகள்களை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்ததாக கூறப்பட்ட வழக்கிலும் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 50 பேருக்கான தீர்ப்பும் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெரும்பாலான நபர்களும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான சிறைத் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
இவ்வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜீர்ன் பியர் எனும் நபருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இவர், டொமினிக் மூலம் தாக்கம் பெற்று தன் மனைவிக்கும் தூக்க மருந்து கொடுத்து ஐந்து ஆண்டுகள் பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இந்நபர் டொமினிக்கும் தன் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்ய வைத்துள்ளார்.
இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட 50 பேரில் பத்திரிகையாளர், டி.ஜே., தீயணைப்பு வீரர், லாரி ஓட்டுநர்கள், பாதுகாவலர்கள் என பலதரப்பட்ட நபர்கள் அடங்குவர்.
கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது.
72 வயதான கிசெல் பெலிகாட் இன்று பிரான்ஸின், பெண் உரிமைகளுக்காகப் போராடும் அடையாளமாக அறியப்படுகிறார்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவருடைய முன்னாள் கணவர் டொமினிக்கால் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார்.
பெலிகாட்டிற்கு தொடர்ச்சியாக மயக்க மருந்து அளிக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இக்குற்றச்சாட்டை டொமினிக் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். பெலிகாட்டும், டொமினிக்கும் குடியிருந்த வீட்டின் சுற்றுவட்டாரத்தில் உள்ள பலதரப்பட்ட 51 ஆண்கள் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.
27 வயதில் இருந்து 74 வயது வரை உள்ள அந்த ஆண்களுக்கு இன்று (டிச. 19) பிரான்சில் உள்ள ஏவிக்னான் நகர நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இன்றைய நீதிமன்ற நிகழ்வு முடிந்ததும் கிசெல் செய்தியாளர்களை சந்தித்தார்.
"எனது வழக்கறிஞர்களுக்கு எனது நன்றியையும் மரியாதையையும் தெரிவிக்க விரும்புகிறேன்." என்றார்.
இந்த விசாரணையை நினைத்து, "எப்போதும் வருத்தப்பட்டதே இல்லை, இந்த விசாரணை மூலமாக இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்பதை சமூகம் பார்க்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
இதேபோல், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் கூட்டமைப்புக்கும் நன்றி தெரிவித்த கிசெல், அவர்கள் தனக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டார். இந்த வழக்கை மிகவும் பொறுப்புடன் கையாண்ட பத்திரிகையாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
கடந்த 2011ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையில் டொமினிக் தன்னுடைய மனைவி கிசெலுக்கு மயக்கு மருந்துகளை உணவு மற்றும் பானங்களில் கலந்து கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார்.
பிறகு, ஆன்லைன் மூலமாக அறிமுகமான ஆண்களை வீட்டிற்கு அழைத்து வந்து, கிசெலை பாலியல் வன்புணர்வு சித்ரவதைக்கு ஆளாக்கியுள்ளார் டொமினிக்.
தொடர்ச்சியாக மயக்க மருந்துகளை எடுத்துக் கொண்டதால் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டுள்ளார் கிசெல்.
கிசெலுக்கு அப்போது வயது 58. 38 ஆண்டுகள் டொமினிக்குடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார் கிசெல். இருவருக்கும் கரோலின், டேவிட் மற்றும் ஃப்ளோரின் என்று மூன்று பிள்ளைகள். தற்போது அனைவரும் நன்கு வளர்ந்து இளைஞர்களாக உள்ளனர்.
தன்னுடைய ஓய்வு காலத்தை, பிரான்ஸின் தெற்கில் உள்ள மஸான் என்ற கிராமத்தில் செலவிட திட்டமிட்டிருந்தனர் அந்த தம்பதியினர்.
1970களில் இருவரும் முதன்முறையாக சந்தித்துக் கொண்டனர். நிதி பற்றாக்குறை போன்ற சிரமங்களை அவர்கள் சந்தித்து இருந்தாலும், அவர்களின் 38 ஆண்டுகால திருமண வாழ்க்கையை அதிர்ஷ்டம் கொண்டதாக நினைத்திருந்தார் கிசெல்.
ஆனால், 2011ம் ஆண்டு கிசெல் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக தூங்கிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி என்ன நடந்தது என்ன என்பதே அவருக்கு நினைவில் இல்லை.
இன்று மஸானுக்கு அருகே அமைந்துள்ள ஏவிக்னான் நீதிமன்றத்தில் கிசெலும் டொமினிக்கும் எதிரெதிராக அமர்ந்து உள்ளனர். டொமினிக் சிறை ஆடையை உடுத்தியுள்ளார். கிசெல் அவருடைய குழந்தைகள் மற்றும் வழக்கறிஞர்கள் சூழ அமர்ந்துள்ளார்.
டொமினிக் தன்னுடைய 50களின் தொடக்கத்தில் அதிகமாக ஆன்லைனில் நேரத்தை செலவிட்டார். பாலியல் தொடர்பான இணையங்களில் பலருடன் பேசுவது, பாலியல் தொடர்பான தகவல்களை பகிர்வது போன்ற செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
2010-2011 ஆண்டுவாக்கில், செவிலியராக பணியாற்றும் ஓர் ஆண், டொமினிக்கிற்கு அந்த தளத்தின் வாயிலாக அவருடைய மனைவியின் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். மேலும், அவருடைய மனைவிக்கு எவ்வாறு மயக்கமருந்து கொடுத்து நினைவிழக்க வைத்தார் என்பதையும் தகவல்களாக அவர் பகிர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் தயக்கம் அடைந்தாலும், டொமினிக் அதேபோன்று தன் மனைவிக்கு மயக்க மருந்தை கொடுத்தார்.
அந்த மாத்திரைகளை சரியான முறையில் எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொண்ட டொமினிக் அதனை கிசெலுக்கு அளித்து அவரை ஆழ்ந்த தூக்கத்திற்குக் கொண்டு சென்றார்.
சுய நினைவில் அணிய விரும்பியிருக்காத ஆடைகளை டொமினிக் கிசெலுக்கு அணிவித்தார். மேலும், பல பாலியல் நடவடிக்கைகளில் கிசெலின் நினைவின்றி அவரை ஈடுபடுத்தியுள்ளார் டொமினிக். மொத்த நிகழ்வுகளையும் வீடியோ காட்சிகளாக பதிவு செய்துள்ளார்.
ஆரம்பத்தில் இந்த குற்றங்களை அவர் மட்டுமே செய்து வந்தார். 2014ம் ஆண்டு அவர்கள் மஸானுக்கு குடி வந்த பிறகு இந்த திட்டத்தை பெரிதாக்கினார் டொமினிக்.
பிறகு ஆன்லைன் சாட் ரூம் மூலமாக அனைத்து வயது ஆண்களையும் கிசெலை பாலியல் ரீதியாக துன்புறுத்த அழைத்துள்ளார் டொமினிக்.
அதை வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார் டொமினிக். நீதிமன்ற விசாரணையின் போது, கிசெல் சுயநினைவின்றி இருக்கும் போது இந்த செயல்களில் ஈடுபட கடந்த 10 ஆண்டுகளில் 71 ஆண்கள் அவர்களின் வீட்டிற்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக பாலியல் சித்ரவதைக்கு ஆளான காரணத்தாலும் மயக்க மருந்துகள் கலந்த உணவை உட்கொண்டதாலும் சுகாதார பிரச்னைகளை எதிர்கொண்டார் கிசெல். உடல் எடை குறைந்தது. முடி கொட்டியது. அடிக்கடி மயக்கம் அடைந்தார். மன உளைச்சலுக்கு ஆளான அவர் இறக்கப் போவதாகவும் நம்பினார்.
அவரின் உடல் நிலையைக் கண்டு கவலை அடைந்தனர் அவரின் குடும்பத்தினர், எப்போது மொபைலில் அழைத்தாலும் டொமினிக்கே பேசி வந்தார்.
"அவர் எங்களிடம், பட்டப் பகலிலும் கிசெல் தூங்கிக் கொண்டிருப்பதாக கூறுவார். ஆனால், எங்களுடன் எங்கள் வீட்டில் இருக்கும் போது பேரக்குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடிய வண்ணம் இருப்பார் கிசெல்," என்று கூறுகிறார் அவரின் மருமகன் பியரி.
கிசெலுக்கு சந்தேகம் ஏற்பட தொடங்கியது. ஒரு சமயத்தில், நீ எனக்கு மயக்க மருந்து ஏதும் கொடுக்கவில்லையே என்று டொமினிக்கிடம் கேட்டுள்ளார் கிசெல். "என்னை எப்படி நீ இப்படி சந்தேகப்படுவாய்?" என்று கேட்டு அழுதுள்ளார் டொமினிக்.
அல்சைமர் அல்லது மூளையில் கட்டி போன்ற காரணங்களால் உடல் நிலை மோசமடைகிறதா என்று சந்தேகம் அடைந்தார் கிசெல். அதனால் மருத்துவ சிகிச்சைகளை அவர் மேற்கொண்டார். ஆனால், அவருக்கு அப்படியாக எந்த பிரச்னையும் இல்லை என்று முடிவுகள் வெளியாகின.
மஸான் பகுதியை விட்டு வெளியே வந்தால் மட்டுமே அவரால் நிம்மதியாக இருக்க முடிந்தது. அதுவும் சில தருணங்களில் மட்டுமே சாத்தியமானது.
கடந்த 2020ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் வெளியூர் சென்றுவிட்டு திரும்பிய பிறகு, டொமினிக் அவரிடம்,"நான் ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்துவிட்டேன். பெண்களின் ஆடைகளை சூப்பர் மார்க்கெட்டில் படம் பிடித்த போது மாட்டிக் கொண்டேன்," என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பு பெண்கள் குறித்துத் தவறாக ஒரு வார்த்தை கூட பேசாத காரணத்தால் டொமினிக் மீது எந்த வருத்தமும் கோபமும் கிசெலுக்கு ஏற்படவில்லை. அதனால் அவர் டொமினிக்கை மன்னித்துவிட்டார்.
ஆனால், சில காலம் கழித்து சூப்பர் மார்க்கெட்டில் வைத்து டொமினிக் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து இரண்டு போன்கள் மற்றும் லேப்டாப் கைப்பற்றப்பட்டது. அதில், 20 ஆயிரம் வீடியோக்களும் புகைப்படங்களும் இருந்தன. அதில், கிசெல் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.
"அனைத்து வீடியோக்களையும் மணிக்கணக்கில் நான் பார்க்க நேரிட்டது. அது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அது நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று அந்த விசாரணையை நடத்திய இயக்குநர் ஜெரேமி பாஸ் ப்ளாடியர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
அவருடைய குழு, அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்த ஆண்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருந்தது. 54 ஆண்களை அவர்கள் அடையாளம் கண்டனர். 21 நபர்களின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
நவம்பர் 2020, 2ம் தேதி அன்று டொமினிக்கும் கிசெலும் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கே காவல்துறையினர் சூப்பர் மார்க்கெட் விவகாரத்தை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது காவலர் ஒருவர் கிசெலை அழைத்து விசாரணை நடத்தினார்.
அப்போது காவல்துறையினர், கிசெல் இரண்டு ஆண்களுடன் இருக்கும் புகைப்படம் அவரிடம் காட்டப்பட்டது. அதில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் கிசெல். பிறகு வீட்டிற்கு வந்த பிறகு தன்னுடைய மகன் மற்றும் மகள்களை அழைத்த கிசெல் காவல் நிலையத்தில் நடந்ததைக் கூறியுள்ளார். அவர்கள் மூவரும் வந்து வீட்டில் பல இடங்களை சோதித்த போது, அவர்களின் மகள் கரோலினும் இதுபோன்று மயக்க மருந்து கொடுத்த புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன.
அனைத்து குடும்ப புகைப்படங்களையும் அழித்துவிட்டதாக கூறுகிறார் டேவிட். டொமினிக் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டார். காவல் நிலையத்தில் அவர்கள் சந்தித்துக் கொண்ட பிறகு 2024ம் ஆண்டில் நீதிமன்றத்தில் தான் அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.
இந்த வழக்கு, உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிசெல் தன்னுடைய அடையாளத்தை மறைத்து, இந்த வழக்கை எதிர்கொள்ளும் உரிமையை நிராகரித்தார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் எதிர்காலம் மற்றும் அவரின் அடையாளத்தைக் கருத்தில் கொண்டு இந்த உரிமை வழங்கப்படுகிறது.
மாறாக, கிசெல் இந்த விசாரணையில் தன் அடையாளத்தை வெளிக்காட்டினார். பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் இந்த விசாரணையின் தன்மையை அறிந்துகொள்ள வழிவகை செய்தார்.
அவர் மயக்க நிலையில் இருந்தார் என்பது எங்களுக்குத் தெரியாது என்று விசாரணையில் பல ஆண்கள் கூறியிருந்ததால் அது, 'தற்செயலாக நிகழ்ந்த பாலியல் வன்புணர்வு' (accidental rape) என்ற ஒரு பார்வை அதில் இருந்தது. ஆனால், கிசெலின் வழக்கறிஞர்கள் குழு, இதற்கு எதிராகப் போராடி, கிசெல் வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோக்களை நீதிமன்றத்தில் ஒளிபரப்பினர். எந்த நிலையில் கிசெல் இருந்தார் என்பதை அந்த வீடியோக்கள் வெளிப்படுத்தின.
தனக்கு நடந்த அநீதியில் இருந்து மீண்டு வர அவருடைய வாழ்நாள் காலம் போதாது என்று கிசெல் கூறியுள்ளார்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.