சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விஜயகாந்தை நினைவு கூர்ந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். மண்ணை விட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் விஜயகாந்த் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் கோலோச்சி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. விஜயகாந்தின் நினைவிடம் அமைந்துள்ள கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தை நோக்கி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் தாரை தாரையாக கொட்ட அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, அவரது மகன்களும் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் நினைவிடத்தில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முதல்வர் மு.க. ஸ்டாலின் விஜயகாந்தை நினைவுகூர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், 'மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் - கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன்!' என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த அடையாளம் கொண்டு கோலோச்சியவரும், தனது உயரிய மனிதநேயப் பண்புகளாலும், ஈகைப் பெருங்குணத்தாலும் தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவருமான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், அன்புச் சகோதரர், பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்தின் நினைவு நாளான இன்று, அவரின் பொதுவாழ்வின் சாதனைகளை நினைவுகூர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் மீது அதிக பாசம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். அவர் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட்டவர். அவரால் வாழ்ந்தவர்கள் பலர் உண்டு எல்லோரிடமும் சமமாக பழகக் கூடியவர் என்றும், நடிகர் ரஜினிகாந்த், என் அன்புக்குரிய கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவருக்கு என் நினைவஞ்சலி என்றும் தெரிவித்துள்ளனர்.
நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், அன்பு நண்பர், தேமுதிக நிறுவனர், கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஓராண்டாகிறது. அவரது இழப்பை மக்களின் மனம் ஏற்க மறுக்குமளவிற்குப் பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன். வறியோர்க்கு உதவும் ஈகை, எளியோரின் பக்கம் நிற்கும் நேர்மை, மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல் ஆகிய அவரது பண்புகள் தமிழ் மனங்களில் எப்போதும் பசுமையாக நிலைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் வெளியிட்ட பதிவில், தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனித்துவமிக்க தலைவராக திகழ்ந்த பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று. உதவி கேட்டு வரும் ஏழை, எளியோருக்கு உதவும் குணம் படைத்தவராகவும், தமிழ் மற்றும் தமிழக மக்களின் மீது அளவு கடந்த அன்பை கொண்டிருந்தவராகவும் திகழ்ந்த கேப்டன் விஜயகாந்தின் புகழ் எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.