சென்னை: வறுமை கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் பற்றி தெரியுமா? இந்த திட்டத்துக்கு தகுதியானர்கள் யார் யார்? பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் சிறப்பம்சங்கள், பலன்கள் என்னென்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
இல்லத்தரசிகளின் வசதிக்காகவே மத்திய அரசு கொண்டுவந்த அருமையான திட்டம்தான் உஜ்வாலா யோஜனா 2.0 திட்டமாகும்.. கடந்த 2016ல் பிரதமர் மோடி துவக்கிய இந்த திட்டமானது, 5 கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்குவதற்காகவே அமல்படுத்தப்பட்டது. இதற்காகவே மத்திய அரசு ரூ.8,000 கோடி ஒதுக்கி செயல்படுத்தி கொண்டிருக்கிறது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த திட்டத்திற்காக, புதிய பயனாளிக்கு ரூ.1,600 நிதியுதவியும் இந்த திட்டத்தில் தரப்படுகிறது. இதன்மூலம் கேஸ் சிலிண்டரை நிரப்பி கொள்ளலாம், எல்பிஜி ஸ்டவ் பெற்றுக் கொள்ளலாம்.
தகுதியுடையவர்கள்: சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு (எஸ்இசிசி) பட்டியலை சேர்ந்த குடும்பங்கள் அல்லது பட்டியல் சாதி (எஸ்.சி) குடும்பங்கள், பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) குடும்பங்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி), பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டப் பயனாளிகள், அந்தியோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்) பயனாளிகள், வனவாசிகள், தீவுகள், ஆற்றுத் தீவுகளில் வசிப்பவர்கள், தேயிலைத் தோட்டம் - முன்னாள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அல்லது மேற்கண்ட வகைகளின் கீழ்வராத ஏழை குடும்பங்கள் போன்ற 7 பிற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இந்த இலவச திட்ட இணைப்புக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
அதேபோல, இந்த திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள் சிலிண்டர் இணைப்புக்கு விண்ணப்பிக்க முகவரி சான்று மற்றும் ரேஷன் கார்டுக்கு பதிலாக சுய அறிவிப்பு பயன்படுத்தலாம். அந்தவகையில், கடந்த 01.11.2024 நிலவரப்படி, மொத்தம் 10.33 கோடி பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகள் உள்ளனர்.
தகுதிகள் என்னென்ன?: இந்த திட்டத்தின் பலனை பெற வேண்டுமானால், இல்லத்தரசிகளின் பெயரில் மட்டுமே சிலிண்டர் இணைப்பு பெற முடியும். அவர்கள் இந்திய குடிமகளாகவும் இருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவர் மட்டுமே இதில் விண்ணப்பம் செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல், விண்ணப்பதாரர் பெயரில் சொந்தமாக ரேஷன் கார்டு இருக்க வேண்டும் . ஏற்கனவே அவரது பெயரின் கீழ் எந்தவிதமான எரிவாயு இணைப்பும் இருக்கக் கூடாது.
கிராம புறமாக இருந்தால் ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கும் கீழ் இருக்க வேண்டும், நகர்ப்புறமாக இருந்தால் 2 லட்சம் ரூபாய்க்கும் கீழ் இருக்க வேண்டும். அது தவிர பட்டியல் இன மற்றும் பழங்குடியின மற்றும் நலிவடைந்த பிரிவை சேர்ந்த பெண்களுக்கும், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வாங்குபவர்களும் இதில் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
இலவச எரிவாயு இணைப்பை பெற வேண்டுமானால், முதலில் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் www.pmuy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.. முகப்பு பக்கத்தில் 'Apply for New Ujjwala 3.0 Connection' என்பதை கிளிக் செய்யவும்.
விண்ணப்பம்: இப்போது இந்தியன், ஹெச்பி, பாரத் ஆகிய மூன்று நிறுவனங்களின் பெயர்கள் உங்கள் முன்பு தோன்றும். நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனத்தின் பெயரைக் கிளிக் செய்யவும். இப்போது விநியோகஸ்தரின் பெயர் மற்றும் முகவரியைத் தேர்ந்தெடுத்து 'Next' என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் மொபைல் எண், பெயர், முகவரி மற்றும் தேவையான தகவல்களை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து 'submit' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்களது இந்த விண்ணப்பங்களை அதிகாரிகள் பரிசீலித்து தகுதியானவர்களுக்கு சிலிண்டர்களை வழங்குவார்கள்.
ஆவணங்கள்: இதற்கு நகராட்சி தலைவர் (நகர்ப்புற பகுதி) அல்லது பஞ்சாயத்து தலைவர் (கிராமப்புற பகுதி) வழங்கிய வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கான சான்றிதழ், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் நம்பர், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஜாதி சான்றிதழ், முகவரி சான்றிதழ், விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம், ஜன் தன் வங்கிக் கணக்கு அல்லது வங்கி பாஸ்புக் போன்றவை தேவைப்படும்.
நீங்கள் விரும்பினால், ஆன்லைனில் மட்டுமல்லாமல் ஆஃப்லைனிலலும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதால் விறகு அடுப்பு வைத்திருக்கும் குடும்பங்கள் சிலிண்டர் இணைப்புக்கு மாறி வருகின்றனர்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.