கூடை கூடையாக மீன்கள்.. நள்ளிரவில் சென்னை காசிமேட்டில் பரபரப்பு.. ரு.1000-க்கு துள்ளிய வஞ்சிரம் மீன்

post-img
சென்னை காசிமேட்டில், 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் மீன்பிடி தொழிலில் தினந்தோறும் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் வாரஇறுதி விடுமுறைகளை கணக்கிட்டு, முன்கூட்டியே மீன்பிடிக்க செல்வது மீனவர்களின் வழக்கமாகும். நள்ளிரவு: வார நாட்களில் கடலுக்கு செல்லும் மீனவர்கள், சனிக்கிழமை நள்ளிரவுகளில், விதவிதமான மீன்களுடன் கரைக்கு திரும்பி வருவார்கள்.. இதனால், சனிக்கிழமை நள்ளிரவிலும், காசிமேட்டில் கூட்டம் அலைமோதும். மீன்கள் பிரஷ்ஷாக இருப்பதால், அப்போதே கூடை கூடையாக வாங்கி செல்வார்கள். மறுநாள் ஞாயிறு விடிகாலையிலேயே மீண்டும், காசிமேடு, திருவிழா போல கூட்டம் காணப்படும். ஆனால், ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் காசிமேடு வியாபாரமின்றி காணப்படும்.. தமிழகத்தில் பெரும்பாலானோர் அசைவம் தவிர்த்து, சைவம் மட்டுமே இந்த புரட்டாசியில் சாப்பிடுவார்கள். அதேபோல, கார்த்திகை மாதத்திலும் பலர் அசைவ உணவுகளை தவிர்ப்பார்கள்.. கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்ப சுவாமியை வேண்டி மண்டல பூஜைக்காக மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். எனவே, புரட்டாசி, கார்த்திகை மாததங்களில் காசிமேட்டில் மீன்கள் விலை குறைந்து காணப்படும். ஐயப்ப சீசன்: இந்நிலையில் தற்போதும் ஐயப்ப சீசன் நடந்து கொண்டிருக்கிறது.. ஆனால், காசிமேட்டில் நேற்று மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ வஞ்சிரம் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக, சனிக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு ஏல முறையில் தொடங்கும் இந்த மீன் விற்பனையில் பெரிய, சிறிய அளவிலான சுற்றுவட்டார வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்வார்கள். அந்தவகையில், இந்த ஆண்டின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான நேற்று வழக்கமாய் கூடும் கூட்டத்தைவிடவும், அதிகளவில் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வமுடன் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்திருந்தனர். விசைப்படகுகளின் குறைவான வரத்தால் அதிகப்படியான மீன்கள் விற்பனைக்கு வந்தபோதிலும் மீன்களின் விலை உயர்ந்தே காணப்பட்டது. விலை உயர்வு: அதன்படி ஒரு கிலோ வஞ்சிரம் 900ல் இருந்து 1,000க்கு விற்கப்பட்டது. வவ்வால் மீன்கள் 600க்கும், இறால் மற்றும் நண்டு 350ல் இருந்து 400க்கும், சங்கரா 300ல் இருந்து 350க்கும், கிழங்கான் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை ஒப்பிடும்போது, வஞ்சிரம், சங்கரா, வவ்வால் ஆகியவற்றின் விலை கணிசமாக 50 முதல் 100 ரூபாய் வரை உயர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post