மார்ச் மாதம் விஜய் எடுக்கப் போகும் அரசியல் அவதாரம்.. மாறுது களம்.. தடதடக்கும் தவெக

post-img
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சி மூலம் ஆக்டிவ் அரசியலுக்குள் நுழைந்து ஓராண்டு ஆகவுள்ளது. தற்போது தனது கடைசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் மார்ச் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் அந்தக் கட்சியின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. கொள்கை எதிரியாக பாஜகவையும், அரசியல் எதிரியாக திமுகவையும் அறிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டு பேசிய கருத்துகளும் பரபரப்பை ஏற்படுத்தின. அதேநேரத்தில் விஜய்யின் அரசியல் மீது பல்வேறு விவாதங்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன. எல்லாப் பிரச்னைகளுக்கும் அறிக்கை மட்டுமே வெளியிடுகிறார். களத்துக்கு வருவதில்லை. என்று புகார் உள்ளது. சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பனையூர் அலுவலகத்தில் அழைத்து நிவாரணம் வழங்கியது, தலைவர்கள் பிறந்தநாள், நினைவு நாளில் அலுவலகத்தில் வைத்தே படங்களுக்கு மரியாதை செலுத்துவது கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அவரை, பனையூர் பண்ணையார் என்று விமர்சித்து வருகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் விவகாரத்தில் அவர் நேரடியாக ஆளுநரை சந்தித்து பேசியிருந்தார். தற்போது அ. வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து வரும் விஜய், அந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ஆக்டிவ் அரசியலில் ஈடுபடுவார் என்று தவெகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதமே அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. பிறகு இந்த மாத இறுதியில் சுற்றுப்பயணம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் திட்டமிட்டபடி அவரது சுற்றுப்பயணம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் விஜய் வருகிற மார்ச் மாதத்தில் இருந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பயணத்திட்டத்தை ஏற்பாடு செய்ய சொல்லி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விஜய் கூறியுள்ளாராம். ஜனவரி மாத இறுதிக்குள் பயணத்திட்டம் தயாராகிவிடும் என்று தவெகவினர் கூறியுள்ளனர். வருகிற பிப்ரவரி மாதத்துடன் தவெக தொடங்கப்பட்டு முதலாமாண்டு நிறைவடைகிறது. அதை பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்களாம். ஆண்டு விழாவை முன்னிட்டு விஜய் சில அதிரடி முடிவுகளைஅறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தொடங்கப்பட்டு ஓராண்டு ஆனாலும், மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். தொண்டர்கள் விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதையடுத்து அடுத்த மாதத்துக்குள் அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாம். இதற்கான பணிகளில் மாநில நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். இதனுடன் தவெகவை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக விஜய் மேலும் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக தவெக வட்டாரத்தில் கூறுகின்றனர். ஆக்டிவ் அரசியலில் இறங்கியவுடன் அவர் சினிமாவுக்கு முழுவதுமாக முழுக்கு போடுவதற்கு விஜய் திட்டமிட்டுள்ளார். சுற்றுப்பயணத்தை வித்தியாசமாக வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது என்று தவெக நிர்வாகிகள் கூறியுள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post