அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: போராடும் அதிமுக, பாராட்டும் பாஜக - திமுகவுக்கு நெருக்கடியா?

post-img
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரம் தொடர்பாக 'யார் அந்த சார்?' என்ற போராட்டத்தை நடத்திவருகிறது அ.தி.மு.க. சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23ஆம் தேதியன்று மாணவி ஒருவர் இரவு உணவுக்குப் பிறகு, மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மறுநாள் காலையில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார். இந்த விவகாரம் மாநில அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், டிசம்பர் 25ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக 37 வயதான ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றம் தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இருந்த விவரங்கள் சில ஊடகங்களில் வெளியாகின. அதில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர், "சார்" ஒருவருடன் தனியாக இருக்க வேண்டும் என மிரட்டியதாகக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த நபர் குறிப்பிட்டதாகச் சொல்லப்படும் 'சார்' என்பவர் யார் என கேள்விகள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண், "சார் என யாரும் கிடையாது. அந்தப் பெண்ணை மிரட்டுவதற்காகவே அந்த நபர் அவ்வாறு பேசினார்" என்று தெரிவித்தார். இருந்தபோதும், 'சார்' எனக் குறிப்பிடப்பட்ட நபர் யார் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பிவந்தன. குறிப்பாக அ.தி.மு.க. இந்த விவகாரத்தை முன்வைத்து போராட ஆரம்பித்தது. ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்குள் திடீரென நுழைந்த அ.தி.மு.கவினர் 'யார் அந்த சார்?' என்று எழுதப்பட்ட பதாகைகளை உயர்த்திப் பிடித்தனர். மாலுக்கு வந்த பொதுமக்களிடமும் இது தொடர்பாக பேசினர். இது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பேசு பொருளான நிலையில், சென்னையின் பல இடங்களிலும் "யார் அந்த சார்?" என்ற வாசகத்துடனான போஸ்டர்கள் பெரும் எண்ணிக்கையில் அ.தி.மு.கவின் சார்பில் ஒட்டப்பட்டிருக்கின்றன. மற்றொரு பக்கம், திங்கட்கிழமை காலையில் மாநிலத்தின் பல இடங்களிலும் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை முன்வைத்து அ.தி.மு.க. போராட்டம் நடத்தியிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டனர். திங்கட்கிழமை காலை முதல் யார் அந்த சார் என்ற ஹாஷ்டாகுடன் எக்ஸ் தளத்தில் அ.தி.மு.கவினர் பதிவுகளை இட்டுவருகின்றனர். "ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள், தகவல்களால் தி.மு.க. அரசு இந்த வழக்கிலும் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது. அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அ.இ.அ.தி.மு.கவின் போராட்டம் தொடரும்" என்று அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்திருக்கிறார் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அ.தி.மு.க. தகுந்த எதிர்க்கட்சியாக செயல்படவில்லை, தீவிரமான போராட்டங்கள் எதையும் நடத்தவில்லை என பேச்சுகள் இருந்த நிலையில், அ.தி.மு.க. இப்படி ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறது. 'சார்' என ஒருவர் இருந்ததாக பாதிக்கப்பட்டவரே குறிப்பிடும் நிலையில், அந்த நபரைக் கண்டுபிடிக்கும் திசையில் விசாரணை நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தை நடத்தியதாகச் சொல்கிறார் அ.தி.மு.கவின் தேசிய செய்தித் தொடர்பாளரும் அக்கட்சி ஐ.டி. விங்கின் தலைவருமான கோவை சத்யன். "குற்றம்சாட்டப்பட்ட நபர் சார் என ஒருவரைக் குறிப்பிடுவதாக செய்திகள் வெளிவந்தன. யார் அந்த இன்னொரு நபர் என நீதிமன்றமும் கேள்வியெழுப்பியிருக்கிறது. கைதுசெய்யப்பட்ட நபர், இன்னொரு நபரிடம் பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி சொல்லியிருக்கிறார். ஆனால், ஒரு நபர்தான் அந்த இடத்தில் இருந்தார் என்பதைப் போல இந்த விவகாரத்தை மூடிமறைக்க தி.மு.க. நினைக்கிறது. அந்த இன்னொரு நபர் அதிகாரம்மிக்கவராகக்கூட இருக்கலாம். ஆகவே, அந்தத் திசையில் விசாரணை நடந்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு ஹாஷ்டாகுடன் போராட்டத்தைத் துவங்கினோம். இந்த விவகாரத்தை பெண்களிடமும் எடுத்துச் செல்வதற்காகத்தான் சென்னையில் உள்ள ஒரு மாலிலும் இந்தப் போராட்டத்தை நடத்தினோம்" என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய கோவை சத்யன். ஆனால், இந்தப் போராட்டங்களைத் தி.மு.க. கடுமையாக விமர்சித்திருக்கிறது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்க முன்வரும் பெண்களை அச்சுறுத்தும் விதமாக இந்தப் போராட்டங்கள் இருப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் குற்றம்சாட்டியிருக்கிறார். "இந்த ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைச் சிதைக்கும் வகையில் சார் யார்? என்று இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார் எடப்பாடி கே. பழனிச்சாமி. பாலியல் புகார்களில் பெண்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவே அஞ்சி நடுங்கிய நிலை மாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக புகார் தருகிறார்கள். அவர்களை மீண்டும் அச்சுறுத்தும் விதமாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை அரசியலையும் போராட்ட நாடகத்தையும் மக்கள் பார்க்கிறார்கள்" என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.கவின் இந்தப் போராட்டம் தி.மு.கவுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். "இந்த விவகாரத்தில் வெளியான முதல் தகவல் அறிக்கையை வைத்து ஒன்றுக்கும் மேற்பட்டோர் இதில் ஈடுபட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இப்போது, 'யார் அந்த சார்' என அ.தி.மு.க. கேள்வியெழுப்பிவரும் நிலையில், இன்னொருவர் கைதானால், அது அ.தி.மு.கவுக்கான வெற்றியாகவே பார்க்கப்படும். அப்படி நடக்காவிட்டாலும், அந்த இன்னொருவர் யார் என்ற கேள்வியை அ.தி.மு.க. தொடர்ந்து எழுப்பிவரும். இந்தப் போராட்டம் அ.தி.மு.கவிற்கு சாதகமாக அமையாவிட்டாலும்கூட, நிச்சயம் தி.மு.க. ஆட்சிக்கு ஒரு நெருக்கடியாகவே அமையும்" என்கிறார் அவர். அ.தி.மு.கவின் இந்தப் போராட்டத்தை, பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டியிருப்பதும் அரசியல் நோக்கர்களைக் கவனிக்க வைத்திருக்கிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post