மாலத்தீவு முய்சு ஆட்சியை கலைக்க இந்தியா முயற்சி? பரவிய சீக்ரெட் ரிப்போர்ட்! மத்திய அரசு பரபர

post-img
டெல்லி: மாலத்தீவு அதிபராக முய்சு பதவிக்கு வந்த பிறகு இந்தியாவுடன் சிறப்பான உறவு இல்லை. இதற்கிடையே முய்சு அரசைப் பதவி நீக்கம் செய்ய அங்குள்ள எதிர்க்கட்சிகள் முயன்றதாகவும் அதற்கு இந்தியா பின்னணியில் இருந்ததாகவும் அமெரிக்கச் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கிடையே இந்தத் தகவல் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோசமான உறவு ஏற்பட்டது. அந்நாட்டின் அமைச்சர்கள் சிலர் பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்துகளைக் கூறியதே மோதலுக்குக் காரணமாக இருந்தது. அதன் பிறகு பலகட்ட நடவடிக்கைக்குப் பிறகு இப்போது தான் ஓரளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மாலத்தீவில் அதிபராக உள்ள முகமது முய்சுவை அதிகாரத்தில் இருந்து நீக்க முயற்சி நடந்ததாகவும் அதில் பின்னணியில் இந்தியா இருப்பதாகவும் அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பான விளக்கத்தை இப்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அளித்துள்ளது. அதாவது மாலத்தீவு அதிபரைப் பதவி நீக்கம் செய்ய மாலத்தீவு எதிர்க்கட்சியின் சதித் திட்டத்துடன் இந்தியாவை தொடர்புப்படுத்தும் அமெரிக்க ஊடகத்தின் செய்தியை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்தது. அந்த குறிப்பிட்ட செய்தி நிறுவனம் இந்தியா மீதான தொடர்ச்சியாக இதுபோன்ற ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை வைப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அந்த செய்தி நிறுவனமும் சரி, குறிப்பிட்ட அந்த ரிப்போர்ட்டரும் சரி இந்தியா மீதான விரோதப் போக்கை வளர்ப்பதாகத் தெரிகிறது. அவர்களின் செயல்பாடுகளில் ஒரு பேர்ட்டனை நீங்கள் காணலாம். எனவே, அவர்களை நம்பலாமா கூடாது என்பதை நீங்கள் மதிப்பிட்டுக் கொள்ளுங்கள். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை அவர்கள் சொன்னதில் எந்தவொரு உண்மையும் இல்லை" என்றார். டெல்லிக்கு வந்துள்ள மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா கலீல் கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் உடன் ஆலோசனை நடத்திய சூழலில் தான் ஜெய்ஸ்வால் இந்த கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார். "Democratic Renewal Initiative" என்ற அந்நாட்டின் பொதுவெளியில் வெளியிடப்படாத இன்டர்னல் டாக்குமெண்ட் அடிப்படையில் ஊடக செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதில் முய்சுவை பதவி நீக்கம் செய்ய அங்குள்ள எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி இந்தியாவிடம் 6 மில்லியன் டாலரை கோரியதாகக் கூறப்பட்டது. இந்த தொகையை வைத்து முய்சு கட்சியைச் சேர்ந்த சுமார் 40 எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுப்பதே திட்டமாக இருந்ததாகவும் இருப்பினும் சில காரணங்களால் இந்த திட்டம் நிறைவேறாமல் போனதாகக் கூறப்பட்டு இருந்தது. அதேபோல பாகிஸ்தானிலும் கூட இதுபோல ஒரு திட்டத்தை இந்தியா முயன்றதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதையும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் மறுத்தார். அவர் மேலும், "ஹிலாரி கிளிண்டன் சொன்னதை போல.. உங்கள் வீட்டின் பின்புறத்தில் பாம்புகள் இருக்கிறது என்றால்.. அது உங்களை விட்டுவிட்டு.. பக்கத்து வீட்டுக்காரரை மட்டும் கடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது" என்று சொல்லி தனது பதிலை முடித்துக் கொண்டார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post