புத்தாண்டு சிறப்பு வழிபாடு! வடபழனி முருகனை நள்ளிரவு 12 மணி வரை தரிசிக்கலாம்!

post-img
சென்னை: உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை வடபழனி முருகன் கோயிலில் நள்ளிரவு வரை தரிசனம் செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. புத்தாண்டு தினமான இன்று பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை என்று எடுத்துக்கொண்டால், மிக முக்கிய வழிபாட்டு தலமாக வடபழனி முருகன் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் பண்டிகை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். அந்த வகையில் இன்று அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது வரை சுமார் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்திருக்கின்றனர். இக்கோயிலில் வழக்கமாக மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 4 மணிக்குதான் திறக்கப்படும். ஆனால் இன்று மதியம் நடை அடைக்கப்படாது என்றும், நள்ளிரவு வரை சுவாமி தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இன்று மட்டும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் வடபழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர். கோயிலில் அதிகாலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரை முருகனுக்கு வெள்ளி நாணய கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து 1 மணிக்கு தங்க கல அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. மாலை 4 மணிவரை முருகன் இந்த அலங்காரத்தில் காட்சியளிப்பார். மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப அலங்காரம் நடைபெறும். மேலும் பல வண்ண மலர்களால் பூ அலங்கரிப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, முதியோர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு என தனி வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. டோக்கன்களை பொறுத்த அளவில் அனைத்து வரிசைகளிலும் ரூ.50, ரூ.100 டோக்கன்களும், அர்ச்சனைக்கான ரூ.5 டோக்கன்களும் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. முன்னதாக புத்தாண்டு சிறப்பு தரிசனத்திற்கு நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்பட கூடாது என்று அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியிருந்தார். அதாவது, "வரும் ஜனவரிம் 1 ஆம் தேதி ஆகம விதிகளை மீறி நள்ளிரவு 12 மணிக்கு கோவில்களை திறந்து சிறப்பு வழிபாடு செய்யக் கூடாது. பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் மது விருந்துடன் கொண்டாடுவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். ஆனால் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று வடபழனி கோயில் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post