அத்தனை துறைகளிலும் ஊழல்.. பேரழிவு சக்தி- டெல்லி பிரசாரத்தில் மோடி- ஆம் ஆத்மி மீது கடும் தாக்கு!

post-img
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசு அத்தனை துறைகளிலும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது; டெல்லி மக்கள் ஆம் ஆத்மி எனும் பேரழிவு சக்தியை அடித்து விரட்டுவோம் என பிரகடனம் செய்திருக்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வென்றாக வேண்டிய நெருக்கடியில் பாஜக இருக்கிறது; ஆம் ஆத்மி கட்சி 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் இருக்கிறது. டெல்லியில் இன்று அசோக் விஹாரில் உள்ள ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்பில் குடிசைப்பகுதி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ஜுகி ஜோப்ரி (ஜே.ஜே) தொகுப்புகளில் வசிப்பவர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. நௌரோஜி நகரில் உலக வர்த்தக மையம் மற்றும் சரோஜினி நகரில் பொதுத் தொகுப்பு (ஜிபிஆர்ஏ) வகை-2 குடியிருப்புகள் ஆகிய இரண்டு நகர்ப்புற மறுமேம்பாட்டுத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். வணிக அடுக்கு மாடி குடியிருப்புகள் நௌரோஜி நகரில் உள்ள உலக வர்த்தக மையம் 600 க்கும் மேற்பட்ட பாழடைந்த குடியிருப்புகளை அதிநவீன வணிக அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாற்றுவதன் மூலம் இப்பகுதியை புதுப்பித்துள்ளது. இது மேம்பட்ட வசதிகளுடன் சுமார் 34 லட்சம் சதுர அடி பிரீமியம் வணிக இடத்தை வழங்குகிறது. இந்தத் திட்டம் பூஜ்ஜிய கழிவு வெளியேற்றம், சூரிய சக்தி உற்பத்தி மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் போன்றவற்றை உள்ளடக்கிய பசுமைக் கட்டிட நடைமுறைகளை கடைபிடித்து கட்டப்பட்டதாகும். சரோஜினி நகரில் உள்ள ஜிபிஆர்ஏ வகை-II குடியிருப்புகள் 28 உயரடுக்கு கோபுரங்களை உள்ளடக்கியது, இது 2,500 குடியிருப்பு வீடுகளைக் கொண்டுள்ளது, இது நவீன வசதிகளுடன் கிடைக்கும் இடத்தை திறமையாகப் பயன்படுத்தியுள்ளது. திட்டத்தின் வடிவமைப்பானது மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், கழிவுநீர் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள வாழ்க்கையை ஊக்குவிக்கும் சூரிய சக்தியில் இயங்கும் கழிவு தொகுப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. டெல்லி துவாரகாவில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டுள்ள சிபிஎஸ்இ-யின் ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதில் அலுவலகங்கள், ஆடிட்டோரியம், மேம்பட்ட தரவு மையம், விரிவான நீர் மேலாண்மை அமைப்பு ஆகியவை அடங்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த இக்கட்டடம் உயர் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் பவள மதிப்பீட்டு தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான மூன்று புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் கிழக்கு டெல்லியில் உள்ள சூரஜ்மல் விஹாரின் கிழக்கு வளாகத்தில் ஒரு கல்வி வளாகமும் துவாரகாவில் உள்ள மேற்கு வளாகத்தில் ஒரு கல்வி வளாகமும் அடங்கும். நஜாஃப்கரின் ரோஷன்புராவில் கல்விக்கான அதிநவீன வசதிகளைக் கொண்ட வீர சாவர்க்கர் கல்லூரி கட்டுவதும் இத்திட்டங்களில் அடங்கும். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: எனக்காக நான் ஒரு வீடு கூட கட்டிக் கொண்டது இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்காக, அவர்களது கனவுகளை நிறைவேற்றும் வகையில் 4 கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மதுபான ஊழல், பள்ளி ஊழல், காற்று மாசு ஊழல் என அனைத்து துறைகளில் ஊழல் கரைபுரண்டோடுகிறது. டெல்லியைப் பொறுத்தவரையில் ஆம் ஆத்மி அரசு பேரழிவு சக்தியாகும். டெல்லி மக்கள் இந்த பேரழிவு சக்தியான ஆம் ஆத்மியை வீட்டுக்கு விரட்டியடிப்போம், என பிரகடனம் செய்துள்ளனர். நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி அரசு தொடர்ந்து செயல்பட்டால் நிலைமை மோசமாகும்; சீரழிக்கப்பட்டு விடும். டெல்லி மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. 2025-ம் ஆண்டில் தலைநகர் டெல்லியில் புதிய நல்லாட்சி அமையும். மக்கள் நலன் சார்ந்த அரசியல் இனி தொடங்கும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post