ஆளுநர் வெளியேற ’இது’ தான் காரணம்! ராஜ் பவன் வெளியிட்ட விளக்கம்! சில நிமிடங்களில் காணாமல் போன ட்வீட்!

post-img
சென்னை: 2025ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதால் ஆளுநர் வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்த நிலையில் சில நிமிடங்களில் அந்த ட்வீட் டெலிட் செய்யப்பட்டு, மீண்டும் வெளியிடப்பட்டது. குறிப்பாக அந்த பதிவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் டேக் செய்யப்பட்டிருந்தனர். 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டத்துடன் இன்று ஆளுநர் உரையுடன் கூடும் என தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். வழக்கமாக ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள். கொள்கைகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும். சட்டப்பேரவை தயாரித்துக் கொடுக்கும் உரையை ஆளுநர் வாசிப்பது வழக்கம். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் பங்கேற்று உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். அவரை தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆளுநரை வரவேற்றனர். இந்த நிலையில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முழக்கம் எழுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் ஆளுநர் அமர்ந்திருந்த இருக்கை முன் குரல் எழுப்பியதாக கூறப்படுகிறது. அவர்களை அமைதிப்படுத்தும் நோக்கில் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டின் சட்டசபை பாரம்பரியத்தின் அடிப்படையில் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளியேறினார். ஆண்டின் முதல் கூட்டத் தொடரிலேயே ஆளுநர் சபையை புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் தமிழ்நாடு சட்டசபையில் மாண்பை குலைத்து விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின. தொடர்ந்து ஆளுநர் வெளியேறியதால் அவரது உரையை தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக குரல் எழுப்பிய அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் ஆளுநர் ஏன் உரையை புறக்கணித்தார் என்பது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. இது தொடர்பாக தமிழ்நாடு ராஜ்பவனின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்," தமிழ்நாடு சட்டசபையில் இந்தியாவின் அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதம் மீண்டும் ஒருமுறை அவமதிக்கப்பட்டுள்ளது. தேசிய கீதத்தை மதிப்பது என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படை கடமையாகும். அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரையும் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் பாடப்படுகிறது. இன்று சட்டசபையில் ஆளுநர் வந்தபோது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டது. ஆளுநர் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதோடு தேசிய கீதத்தை பாடுவதற்கு அவை தலைவரான சபாநாயகர் மற்றும் முதலமைச்சருக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால் தேசிய கீதத்தை பாட முடியாது என அவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது என கவர்னர் கடும் வேதனை உடன் சபையை விட்டு வெளியேறினார்" என கூறப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிட்ட இந்த விளக்கம் வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே திடீரென டெலிட் செய்யப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சில நிமிடங்களில் அந்த பதிவு மீண்டும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அந்தப் பதிவை ரீ-ட்வீட் செய்த ஆளுநர் மாளிகை, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் உள்ளிட்டவற்றை டேக்ஸ் செய்தது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post