வேற மாதிரி மாறப்போகுது சிங்காநல்லூர் பேருந்து நிலையம்.. கோவை மக்களுக்கு சூப்பரான புத்தாண்டு பரிசு

post-img
கோவை: கோவை மாவட்டம் விரைவில் மெட்ரோ சிட்டி அந்தஸ்தை பெறவுள்ளது. ஆனால் அங்குள்ள பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் கூட செய்யப்படாமல் உள்ளன. ஏற்கனவே காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளது. தற்போது சிங்காநல்லூர் மற்றும் சாய்பாபாகோவில் பேருந்து நிலையம் புனரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. கோவை விமான நிலையம் விரிவாக்கம், கோவை ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்கள் மேம்படுத்துதல் பணிகள் தொடங்க உள்ளன. அதேபோல முக்கியப் பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன. அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் தொடங்கி நீலாம்பூர் வரை உயர் மட்ட மேம்பாலம், சாய்பாபா காலனி பகுதியில் 2 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. ரூ.200 கோடி மதிப்பில் கோவை சாலைகளை புனரமைக்கும் பணிகள், மேற்கு புறவழிச்சாலை திட்டம், அவிநாசி - மேட்டுப்பாளையம் 4 வழிச்சாலை பணிகள், காளம்பாளையம் - மாதம்பட்டி 4 வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது. இதேபோல தங்கநகை பூங்கா அமைப்பதற்கான டெண்டர் விடும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. ஐ.டி துறையிலும் கோவை முக்கிய ஹப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறது. டெக் சிட்டி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்படும் பணிகளும் நடந்து வருகின்றன. இதுதவிர செம்மொழி பூங்கா, பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. காந்திபுரம் பகுதியில் புதிதாக ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையத்தை புனரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு காந்திபுரம் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்காக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடப்பற்றாக்குறையை போக்கி பார்க்கிங், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் காந்திபுரம் பேருந்து நிலையம் புனரமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதே பாணியில் உக்கடம் பேருந்து நிலையத்தை மேம்படுத்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் சென்னை ஐஐடி வல்லுநர் குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் சிங்காநல்லூர் மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகோவில் பேருந்து நிலையங்களை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கரூர், திருச்சி தொடங்கி மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான பேருந்துகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்துதான் புறப்படுகின்றன. ஆனால் அங்கும் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன. இதனால் பண்டிகை காலங்களில் மக்கள் எல்லாம் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். நீலகிரி மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கான பேருந்துகள் சாய்பாபாகோவில் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். அந்த பேருந்து நிலையத்திலும் அடிப்படை வசதிகள் குறைவால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சிங்காநல்லூர் மற்றும் சாய்பாபாகோவில் பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post