டிடிஎஃப் வாசன் சர்ச்சை: வீட்டில் பாம்பை செல்லப்பிராணியாக வளர்க்க முடியுமா?

post-img
பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன், மலைப்பாம்பு ஒன்றுடன் இருந்த வீடியோவை வெளியிட்டதையடுத்து, சென்னையில் வனத் துறை சோதனை ஒன்றை நடத்தியிருக்கிறது. அவர் கூறுவது போல, இந்தியாவில் வீட்டில் மலைப்பாம்புகளை வளர்க்க முடியுமா? தமிழ்நாடு வனத்துறை கூறுவது என்ன? இதுபோன்ற யூடியூப் வீடியோக்களால் என்ன அபாயம்? பிரபல யூ டியூபரான டிடிஎஃப் வாசன், சமீபத்தில் தனது கையில் பாம்பு ஒன்றை சுற்றியபடி யூடியூபில் வீடியோ வெளியிட்டார். 2 வயதாகும் அந்த பாம்பிற்கு பப்பி எனப் பெயரிட்டுள்ளதாக சட்டபூர்வமாகவே அதனை வாங்கியிருந்ததாகவும் அவர் தனது வீடியோவில் தெரிவித்திருந்தார். மேலும், அந்தப் பாம்பிற்காக கூண்டு ஒன்றை வாங்குவதற்காக திருவொற்றியூரில் உள்ள செல்லப் பிராணிகள் விற்கும் கடைக்கும் சென்றார். இந்த பாம்பு வீடியோ வெளியானதும் சமூகவலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் திங்கட்கிழமையன்று திருவொற்றியூரில் டிடிஎஃப் வாசன் குறிப்பிட்ட கடையில் வனத்துறையினர் சோதனை ஒன்றையும் நடத்தினர். இந்த சோதனை தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. டிடிஎஃப் வாசன் கையில் வைத்திருந்த பாம்பு, Ball Python வகையைச் சேர்ந்தது என அவர் தனது வீடியோவில் தெரிவித்திருந்தார். தனி நபர்கள் இதுபோல பாம்புகளை வளர்க்க முடியுமா? டிடிஎஃப் வாசன் அந்தப் பாம்பை சட்டபூர்வமாக வாங்கியதாகவே வீடியோவில் தெரிவிக்கிறார். இது குறித்துப் பேசுவதற்காக அவரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை. "1972ஆம் ஆண்டின் இந்திய வனப் பாதுகாப்புச் சட்டத்தின்படி இந்தியாவில் கிடைக்கக்கூடிய எந்த ஒரு பாம்பு வகையைும் பிடிப்பது, வைத்திருப்பது, வளர்ப்பது, விற்பது, வேறொருவருக்குக் கொடுப்பது, கொல்வது ஆகியவை குற்றம். ஆகவே இந்தியாவில் கிடைக்கக்கூடிய எந்தப் பாம்பையும் யாரும் வளர்க்க முடியாது. ஆனால், Ball Python போன்ற வெளிநாட்டுப் பாம்பு வகைகளை அனுமதி பெற்று வளர்க்கலாம். மற்ற வகை பாம்புகளை வைத்திருப்பது தெரிந்தால், உடனடியாக வனத்துறை நடவடிக்கை எடுக்கும்" என்று கோயம்புத்தூரில் உள்ள வனவுயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான சிராஜுதீன். இதனை உறுதிசெய்கிறார் தமிழ்நாடு தலைமை வனவுயிர் பாதுகாவலரான ராகேஷ் டோக்ரா. "இந்தியாவில் சாதாரணமாக அடிக்கடி பார்க்கக்கூடிய பாம்பைக் கூட ஒருவர் எடுத்து வளர்க்க அனுமதி கிடையாது. இங்கு கிடைக்கக் கூடிய எல்லாப் பாம்புகளுமே Schedule - 1ல் இடம்பெற்றவை. அவற்றை வளர்ப்பதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது. ஆனால், வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் Exotic வகைகளை மட்டும் வளர்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கென பரிவேஷ் என்ற இணையதளம் செயல்படுகிறது. அந்த இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதியைப் பெற வேண்டும். இதுவரை அனுமதி பெறாதவர்கள் அனுமதி பெற கடந்த ஆகஸ்ட் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. எப்படியிருந்தாலும் இந்தியாவில் கிடைக்கும் சாதாரண பாம்பைக்கூட வளர்க்க அனுமதி கிடையாது" என்கிறார் ராகேஷ் டோக்ரா. ஆனால், இது போன்ற யூ டியூப் வீடியோக்களால் வேறு சில அபாயங்கள் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார் சிராஜுதீன். "சில யூ டியூபர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, இந்தியாவில் கொல்வதற்கும் உணவாக உண்பதற்கும் தடை செய்யப்பட்ட மான்கள், பாம்புகள் ஆகியவற்றை உணவாக உண்பதைக் காட்டுகின்றனர். இது இங்கிருப்பவர்களையும் அந்தச் செயலைச் செய்யத் தூண்டும். அவை தவிர்க்கப்பட வேண்டும்" என்கிறார் சிராஜுதீன். Ball Python வகைப் பாம்புகள் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் புல்வெளிகளில் வசிக்கக் கூடிய விஷமற்ற பாம்புகள். மலைப் பாம்புகளிலேயே மிகவும் சிறியவை இவை. இந்த வகைப் பாம்புகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்களுக்கு விற்பனை செய்வதற்காக, வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கிறன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாங்காக்கிலிருந்து வந்த ஒருவரிடமிருந்து 9 Ball Python பாம்புகளை கைப்பற்றினர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை விமான நிலையத்தில் 12 Ball Python பாம்புகள் வருவாய் புலனாய்வுத் துறையினரால் கைப்பற்றப்பட்டன. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post