பம்ப் செட் வாங்க ரூ.15,000 மானியம்.. குறைந்த விலையில் வாடகை கருவிகள்.. சேலம் விவசாயிகள் மகிழ்ச்சி

post-img
சேலம்: சேலம் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் இ-வாடகை, தரிசு நில உழவு மானியம் மற்றும் மின்மோட்டார் பம்புகள் மானியத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். மாவட்ட கலெக்டர் வெளியிட்ட செய்தி குறிப்பில் உள்ளாவது: "தமிழ்நாடு அரசு வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக வேளாண்மைப் பொறியியல் துறை பல்வேறு புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது. இத்துறையில் குறைந்த வாடகைக்கு இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பதிவு செய்ய விவசாயிகள் இ வாடகை செயலியை உழவர் செயலி வழியாக அணுகி பயன் பெறலாம். மேலும், நிலம் சமன் செய்தல். சோளத்தட்டு அறுவடை தென்னை மட்டை துளாக்கும் கருவி, விதை விதைத்தல், மற்றும் பல்வேறு பயிர்களை கதிரடித்தல் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கும் டிராக்டரால் இயங்கக்கூடிய இயந்திரங்களும் வேளாண் பொறியியல் துறையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. டிராக்டர்: இதுபோன்று டிராக்டரால் இயங்கக்கூடிய அனைத்து கருவிகளும் டிராக்டருடன் மணிக்கு ரூ.500/- என்ற குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இவாடகை செயலி வழியாக வாடகைக்கு இதுபோன்று மண் தள்ளும் இயந்திரம் (Bull Dozer) மணிக்கு ரூ.1230/-க்கும், மண் அள்ளுவதற்கும், பண்ணைக் குட்டைகள் அமைத்திடவும், புதர்களை அகற்றவும், டிராக் வகை மண் அள்ளும் இயந்திரங்கள் (Crawler Excavator) மணிக்கு ரூ.1,910-க்கும் சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் ( JCB )மணிக்கு ரூ.890/-க்கும். தேங்காய் பறிக்கும் இயந்திரம் மணிக்கு ரூ.450-க்கும் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன. சிறுதானியம் சாகுபடி: இவை அனைத்தும் இ-வாடகை செயலி மூலம் வீட்டிலிருந்தே முன்பதிவு செய்து பயன்பெறலாம். இத்துறையில் நடப்பு 2024 25 ஆம் நிதி ஆண்டில் 210.00 ஹெக்டர் பரப்பில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத் திட்டத்தின் கீழ் சிறுதானியம் சாகுபடிக்கு தரிசு நிலத்தில் உழவு மேற்கொள்ள மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 40 சதவிகித மானியம் ஒரு விவசாயிக்கு 2.00 ஹெக்டர் வரை அதிகபட்சமாக ரூ.5400/- வழங்கப்படும். நிலத்தடிநீர் பாசனத்திற்கு உதவும் வகையில் சிறு மற்றும் குறு விவசாயகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதிலாகவும், புதிதாக அமைக்கப்பட்ட கிணறுகளுக்கும் புதிய மின்மோட்டார் பம்புசெட் வாங்க நடப்பு நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.15000 எது குறைவோ அது மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பயன்பெறலாம்: மேலும், இத்திட்டம் தொடர்பாக முழு விபரங்களை பெற்று பயனடைய வேளாண்மைப் பொறியியல் துறையின் சேலம் மாவட்ட வேளாண்மை பொறியியல் செயற் பொறியாளர் அலுவலகம் அல்லது வருவாய் கோட்ட அளவில் உள்ள சேலம், மேட்டூர், ஆத்தூர் மற்றும் சங்ககிரியில் செயல்படும் வேளாண்மை பொறியியல் உதவி செயற்பொறியாளார் அலுவலகம் அல்லது வட்டார அளவில் வேளாண்மை பொறியியல் உதவி பொறியாளர் /இளநிலை பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post