காலையிலேயே கருப்பு Band-களுடன் அண்ணா பல்கலை. முன்பு குவிந்த அதிமுக மாணவர் அணியினர் கைது.. பரபரப்பு!

post-img
சென்னை: சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முன்பு இன்று காலையில் மாணவ, மாணவிகளுக்கு கருப்புப்பட்டை (Black Band) வழங்க முயன்ற அதிமுக மாணவர் அணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டியதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் எஃப்.ஐ.ஆர் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், புகார் அளிப்பதற்கு காவல் நிலையத்திற்கு மக்கள் வருவதற்கே பயப்படும் நிலைதான் தற்போது உள்ளது. அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரணை செய்யும் என உத்தரவிட்டனர். மேலும், மாணவி புகார் தொடர்பான FIR பொதுவெளியில் கசிந்ததற்காக பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகையை குற்றத்தில் தொடர்புடையவர்களிடம் வசூலிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. சென்னை காவல் ஆணையர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, அண்ணாநகர் துணை கமிஷனர் புக்யா சினேகா பிரியா, ஆவடி துணை கமிஷனர் அய்மன் ஜமால், சேலம் துணை கமிஷனர் எஸ்.பிருந்தா ஆகிய 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக சேர்க்கப்பட்ட போலீசார் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, அரசியல் கட்சிகள், இந்த விவகாரம் தொடர்பாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்த முயன்ற நிலையில் அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று காலையிலேயே சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து இன்று காலை 8.30 மணிக்கு அதிமுக மாணவரணி சார்பில் அண்ணா பல்கலைக்கழக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு கருப்புப் பட்டை (Black band) வழங்க முயன்றனர். இதற்காக 7 மணியளவிலேயே அதிமுகவினர் அண்ணா பல்கலைக்கழகம் முன்பாக திரளத் தொடங்கினர். இதையடுத்து, அங்கு குவிந்த போலீசார், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை எனக் கூறி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், அங்கிருந்து வெளியேற மறுத்த அதிமுக மாணவரணி நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அதிமுக மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்து, வேன்களில் ஏற்றினர். அப்போது, காவல்துறை அராஜகம் ஒழிக என்றும், திமுக அரசுக்கு எதிராகவும் அதிமுக மாணவர் அணியினர் முழக்கம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடந்த இடத்தில் ஏராளமான கருப்பு பேண்டுகள் சிதறிக் கிடந்தன. கைது செய்யப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், "உள்ளே வராமல் ஒரு ஓரமாக நின்று ஒரு கருப்பு பேண்டை மாணவர்களுக்கு வழங்க முயன்றதற்கு கைது செய்துள்ளனர். ஏன் கறுப்பை பார்த்து பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post