'எருமை மாடா டா நீ'.. விழா மேடையில் உதவியாளரை தரக்குறைவாக பேசிய அமைச்சர்.. வலுக்கும் கண்டனம்

post-img
தஞ்சாவூர்: தஞ்சாவூர், மேலவஸ்தாசாவடியில் நடைபெற்ற விழா ஒன்றில் தன் உதவியாளரை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மேடையிலேயே தரைக்குறைவாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், மேலவஸ்தாசாவடியில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேளாண்மை மற்றும் உணவுப் பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி தொடங்கியுள்ளது. இந்த மாநாடு மற்றும் கண்காட்சி இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து மாநாட்டில் பேசுவதற்காக மேடைக்கு முன்பு சென்றார். அப்போது, பேசுவதற்கான குறிப்பு இல்லாததால் கடும் கோபமடைந்தார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம். உடனடியாக, தனது உதவியாளர் பரசுராமன் எங்கே என்று சப்தமாக கேட்டுள்ளார். இதனை அறிந்த உதவியாளர் பரசுராமன் உடனடியாக மேடைக்கு அருகே அமைச்சரின் குறிப்புடன் ஓடி வந்தார். அப்போது அமைச்சர் உதவியாளரைப் பார்த்து, எருமை மாடா டா நீ என்று ஒருமையிலும், தகாத வார்த்தையிலும் மேடையில் வைத்தே திட்டினார். பின்னர், உதவியாளர் கொடுத்த அந்த பேப்பரை கையில் வாங்கி அவரிடமே தூக்கிப் போட்டுவிட்டார். இந்த சம்பவம் மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தனது உதவியாளரை தரக்குறைவாக பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கண்டன குரல்கள் கிளம்பியுள்ளன. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post